பொது

பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் நுழைந்த மலேசியர்களை அழைத்து வர அரசாங்கம் முயற்சி

04/09/2024 05:57 PM

தானா மேரா, 04 செப்டம்பர் (பெர்னாமா) --  கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிலிப்பைன்ஸ் கடல்பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அவர்களை அழைத்து வருவதற்கான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதோடு விரைவில் நேர்மறையான பலன் கிடைக்கும் என்று நம்பப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

''அதை நிர்வகித்த பயண முகவர் நிறுவனத்தை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். அண்டை நாடுகளின் கடல் எல்லைகளுடன் நமது கடல் எல்லைகளைக் கட்டுப்படுத்தும் சபா துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறையை நாங்கள் தொடர்புகொள்ளவிருக்கிறோம். இச்சம்பவத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நமது கடல்பகுதியைக் கடந்துவிட்டது'', என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சட்டவிரோதமாக தங்கள் நாட்டு கடல்பகுதியில் நுழைந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு மலேசியர்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த எண்மர் என்று 15 பேரை பிலிப்பைன்ஸ் அமலாக்கத் தரப்பினர் கைது செய்தனர்.

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாத அவர்கள், இரண்டு விரைவு படகில் பிலிப்பைன்சிற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)