பொது

GOAT திரைப்படக் கொண்டாட்டத்தில் இரசிகர்கள்

06/09/2024 07:51 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) --  மக்களின், குறிப்பாக நடிகர் விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது THE GREATEST OF ALL TIME, GOAT திரைப்படம்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படமாக, நேற்று தொடங்கி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கும் விஜய்க்கு இப்படம் கடைசிக்கு முந்தைய படமாக இருப்பதால் வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன.

மோகன், லைலா, பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 3 மணி நேரத்திற்கு ரசிகர்களை மகிழ்வித்தது.

காதல், சண்டை, குடும்பம் என பல்வேறு திருப்பங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் GOAT திரைப்படத்தை விநியோகம் செய்திருக்கும், 5 ஸ்டார் நிறுவனமும் VEEDU PRODUCTION-உம், அத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதோடு நல்ல வசூலையும் ஈட்டித் தரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர்.

''இந்த படம் 160 திரையரங்குகளில் திரையீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் நாங்கள் ஜெய்லர் படத்தை வெளியாக்கினோம். அப்போ ஒரு 15 மில்லியன் வசூல் கிடைத்தது. அதுதான் மலேசியாவில் அதிக வசூல் பெற்ற முதல் தமிழ் திரைப்படம். இப்போது இந்த எண்ணிக்கையை இப்படம் முறியடிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்'', என்று கூறினார் 5 ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் சாய் சுதன்.

''வரவேற்பு ரொம்ப நல்லா இருக்கு. படம் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக கூறினர். முதற்கட்ட விற்பனையில் 2.4 மில்லியன் சேகரிக்கப்பட்டது. இதுதான் முதல் நாள் இனிமேல் போக போக தான் தெரியும்'', என்று வீடு PRODUCTION நிறுவன தோற்றுநர் டெனிஸ் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுவாகவே, ஒரு திரைப்படத்திற்கு உயிரோட்டம் அளிப்பதில் இசை முக்கிய பங்கு வகிக்கின்றது.

அவ்வகையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசைக் காட்சிகள் மக்களுக்கு மேலும் விறுவிறுப்பூட்டுவதாக ரசிகர்கள் சிலர் தெரிவித்தனர்.

''இந்த படத்தில் செயற்கை நுண்ணறிவு பயனபடுத்தப்பட்டுள்ளதாக கூறினர். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். காலையிலிருந்து படம் குறித்த மிகையான தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. எனவே, அதே ஆர்வத்தோடு நான் வந்திருக்கிறேன்'', என்று கூறினார் பெரிய நாயகி முருகையா.

''நான் பினாங்கில் உள்ளோன். ஒவ்வொரு முறையும் விஜய் திரைப்படம் வெளிவரும் போது நான் சில நண்பர்களைத் திரட்டிக் கொண்டு படம் பார்க்க செல்வேன். இதையே என்னுடைய வேலையாக வைத்திருப்பேன். இப்போது நான் கோலாலம்பூரில் வேலை செய்வதால் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு வர முடியவில்லை. இருப்பினும், படத்தைப் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்'', என்று ஜெய்சங்கர் கிருஷ்ணன் கூறினார்.

GOAT திரைப்படத்தின் சிறப்பு காட்சி, நேற்று, கோலாலம்பூர் GSC லாலாபோர்ட் திரையறங்கில் ஒளியேறியது.

முன்னதாக விஜய் நடித்த திரைப்படங்களின் சில பாடல்கள் அடங்கிய ரசிகர்களின் படைப்புகளும் திரையரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)