பொது

ரோஸ்மாவின் 3ஆவது பிரதிநிதித்துவ மனு தொடர்பில் தேசிய சட்டத்துறை இன்னும் முடிவெடுக்கவில்லை

06/09/2024 06:19 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) --  தாம் எதிர்நோக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கான டத்தின் ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் செய்த மூன்றாவது பிரதிநிதித்துவ மனு தொடர்பில் தேசிய சட்டத்துறை இன்னும் முடிவெடுக்கவில்லை.

70 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட தொகையிலான கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான 12 குற்றச்சாட்டுகளையும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு தமது வருமானத்தை அறிவிக்கத் தவறிய ஐந்து குற்றச்சாட்டுகளையும் ரொஸ்மா எதிர்நோக்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அவ்விவகாரம் உள்நாட்டு வருமான வரி வாரியத்தை உட்படுத்தி இருப்பதால் அந்தப் பிரதிநிதித்துவம் தொடர்பாக முடிவெடுக்க தேசிய சட்டத்துறைக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அஹ்மாட் அக்ராம் காரிப் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, இவ்வழக்கு நிர்வகிப்பின்போது உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் ரொஸ்மா இவ்விவரங்களைத் தெரிவித்தார்.

இது ரொஸ்மா அனுப்பிய மூன்றாவது பிரநிதித்துவ மனு ஆகும்.

முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிநிதித்துவ மனுக்கள், முறையே கடந்தாண்டில் மே 13ஆம் தேதியும் ஆகஸ்ட் 18-ஆம் தேதியும் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆனால், தேசிய சட்டத்துறை தலைவர் அதன் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில், ரொஸ்மாவின் விண்ணப்பத்திற்கான வாதத்தைத் தொடர இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை நீதிமன்றம் அக்டோபர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)