பொது

பஹ்ரைன்-மலேசியா அரசதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா

06/09/2024 06:29 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) --  பஹ்ரைன்-மலேசியா உறவுகளின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.

1974-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி முதலே இரு நாடுகளும் தொடங்கிய அரசதந்திர உறவுகளின் 50-வது ஆண்டு நிறைவு, அதனை மேலும் வலுப்படுத்தும்.

ஜூலை மாதத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னரின் அரியணை அமரும் சடங்கில் பங்கேற்ற பஹ்ரைன் மன்னர், ஷேக் ஹமாட் பின் இசா அல் கலீஃபாவின் வருகை அவ்வுறவை மேலும் வலுப்படுத்தியது.

பஹ்ரைன் மன்னரின் அவ்வருகை வளமான எதிர்கால திசையை பட்டியலிட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாக அண்மையில், பெர்னாமாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது மலேசியாவுக்கான பஹ்ரைன் தூதர் டாக்டர் வாலிட் கலிஃபா அல் மானியா தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், கல்வி, சுகாதார ஒத்துழைப்புகளை ஆராய்தல் மற்றும் வலுவான கலாச்சார உறவுகளை வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ள இரு நாடுகளும் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, இஸ்லாமிய நிதி, உற்பத்தி, தளவாடங்கள், தகவல், தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கிய துறைகள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மலேசியா-பஹ்ரைன் வர்த்தக உறவுகள், வேலை வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் டாக்டர் வாலிட் கலிஃபா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)