பொது

இணையம் வழியான இயக்கமுறையை உருவாக்கக் கோரிக்கை

06/09/2024 07:19 PM

கோலாலம்பூர், 06 செப்டம்பர் (பெர்னாமா) -- இணையப் பாதிப்புகள் சம்பந்தப்பட்ட சவால்களை எதிர்கொள்ள, இணையம் மற்றும் சுய தரவுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து இணையம் வழியான இயக்கமுறை உருவாக்கப்பட வேண்டும்.

புகார்களை விரைவில் பதிவு செய்யவும், விசாரணைகளை விரிவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மேற்கொள்ள இந்தப் புதிய இயக்கமுறை, முழுமையானதாக இருக்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

''இது, புகார் செய்ய, விசாரணை நடத்த மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய திறமையான அமைப்பை நீங்கள் உருவாக்க முடியுமா இல்லையா என்பது தொடர்புடையது. ஆனால், இது இன்னும் பேச்சு வார்த்தை கட்டத்தில் உள்ளது. இது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன். நாம் தொடர்ந்து செல்லும்போது, ​​​​விஷயங்கள் மிக வேகமாக நகர்கிறது என்பதை அறியப் போகிறோம். மேலும், மக்களின் இணைய பரிமாற்ற அளவினால் இன்னும் அதிகமான புகார்கள் வரும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் 2024-ஆம் ஆண்டு இணையப் பாதிப்புக்கான அனைத்துலக சட்ட மாநாட்டில் உரையாற்றியப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோபிந்த் சிங் அவ்வாறு குறிப்பிட்டார்.

நடப்பிலுள்ள செயல்பாட்டு தர விதிமுறை குறித்து விவரித்த அவர், புகாரளிப்பவர்கள் அதை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணைக்கு நீண்டகால அவகாசம் எடுக்கும் என்றும் கூறினார்.

இதனால், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)