பொது

10 வயது மகனை வாகனம் செலுத்த அனுமதித்த தாய்க்கு அபராதம்

09/09/2024 03:59 PM

சிரம்பான், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- செப்டம்பர் மூன்றாம் தேதி, சிரம்பான், தாமான் அரோவானா இம்பியானில் விபத்து ஏற்படும் அளவிற்கு, தமது பத்து வயது மகனை வாகனம் செலுத்த அனுமதித்த பெண் ஒருவருக்கு 700 ரிங்கிட் அபராதம் விதித்து, சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட 46 வயதுடைய அப்பெண் அதனை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் மர்லிசா முஹ்மட் ஃபஹ்மி அத்தீர்ப்பை அளித்தார்.

துப்புரவு பணியாளரான அப்பெண் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக் ஷன் 39(5)-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

மாதம் 1,500 ரிங்கிட் ஊதியம் பெறும் தமக்கு பள்ளி பயிலும் மூன்று பிள்ளைகள் இருப்பதால் குறைந்த தண்டனையை விதிக்கக் கோரி அப்பெண் கேட்டுக் கொண்டதை கருத்தில் கொண்டு மாஜிஸ்திரேட் மர்லிசா அத்தீர்ப்பை அளித்தார்.

எனினும், விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஏழு நாள்கள் சிறை தண்டனையையும் அவர் எதிர்கொள்வார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502