பொது

ZEV வாகனங்களுக்கு JPJ E-PLATE பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

09/09/2024 05:25 PM

சைபர்ஜெயா, 09 செப்டம்பர் (பெர்னாமா) --  மின்னியல் வாகனங்களான EV உட்பட Zero Emission Vehicle, ZEV அல்லது மாசுபாடற்ற வாயு வெளியேற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்று தொடங்கி மின்னியல் வாகன எண் பட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ZEV வாகனங்கள் இந்த மின்னியல் வாகன எண் பட்டையைப் பயன்படுத்த கட்டாயமாக்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ZEV வாகன உரிமையாளர்கள், தங்களின் வாகனத்திற்கு மின்னியல் வாகன எண் பட்டையைப் பெற விரும்பினால், வரும் நவம்பர் மாத தொடக்கத்திலேயே அதற்காகப் பதிந்து கொள்ளலாம் என்று கூறிய அந்தோணி லோக், அதற்கான செயல்முறை பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

''இன்று தொடக்கி வைக்கப்பட்ட மின்னியல் வாகன எண் பட்டையில் ZEV அல்லாத வாகனங்கள் உட்படுத்தப்படவில்லை. புதிய ZEV வாகனங்களுக்கான மின்னியல் வாகன எண் பட்டை செயல்பாடு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதிலே தற்போது வனம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும் போக்குவரத்து அமைச்சு வரவேற்கிறது'', என்று அவர் கூறினார்.

இன்று சைபர்ஜெயாவில் நடைபெற்ற மின்னியல் வாகன எண் பட்டை தொடக்க விழாவில் உரையாற்றும்போது அவர் அத்தகவல்களைக் கூறினார்.

முன்பக்க மற்றும் பின்பக்க பட்டை, கண்ணாடியில் ஒட்டக் கூடிய RFID, அனுப்பும் சேவை உட்பட அனைத்தையும் உட்படுத்தி மின்னியல் வாகன எண் பட்டைக்கு 98 ரிங்கிட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)