பொது

மனைவியைத் துடைப்பத்தால் அடித்து துன்புறுத்திய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறை

10/09/2024 08:09 PM

கோலாலம்பூர், 10 செப்டம்பர் (பெர்னாமா) --   கணவன் கடனாக கேட்ட 500 ரிங்கிட்டையும் பிள்ளையின் தங்க சங்கிலியையும் கொடுக்க தவறியதால், தமது மனைவியைத் துடைப்பத்தால் அடித்து, அவரை அறைந்தது உட்பட எட்டி உதைத்து துன்புறுத்திய குற்றத்திற்காக, ஆடவர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையை, இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 

பொருள் அனுப்புனராக பணிப்புரியும் 33 வயதுடைய சே நோஹுட் அப்னான் சே ஒமார், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாள் தொடங்கி அவருக்கான தண்டனையைத் தொடங்க நீதிபதி டாக்டர் அஸ்ரோல் அப்துல்லா உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி, இரவு 8 மணிக்கு, வங்சா மாஜூ, தாமான் செதாபாக், ஜாலான் ஜெரெஜாவில் உள்ள தமது வீட்டில் 34 வயதுடைய நூர் அத்தியா முஹமட் அலியை துடைப்பத்தைக் கொண்டு அடித்ததாகவும், அறைந்து, அவரை எட்டி உதைத்து உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தியதாக, தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324 மற்றும் அதே சட்டம் செக்‌ஷன் 326 உட்பிரிவு-A-வின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி அல்லது அம்மூன்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)