லாஸ் ஏஞ்சலஸ், 15 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா, கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் காட்டுத்தீச் சம்பவங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் வேளையில் இதுவரை சுமார் 24 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 12,000 கட்டிடங்கள் தீக்கிரையாகின.
இச்சம்பவத்தினால் 23 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நகரின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான காட்டுத்தீச் சம்பவமாக இது கருதப்படுகிறது.
சுமார் 16,000 ஹெக்டர்ஸ் நிலப்பரப்பு காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வறண்ட வானிலையும் பலத்த காற்றும் தீ வேகமாகப் பரவக் காரணமாக அமைந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டதற்கான மூலக் காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்த முதற்கட்ட அறிக்கையை அரசாங்க நிறுவனங்கள் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், வானிலை மற்றும் அதன் தாக்கம் குறித்த தரவுகளை வழங்கும் AccuWeather நிறுவனம், 25,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]