பொது

ஹஃபிசுலின் வழக்கு விசாரணை டிசம்பரில் நடைபெறும்

11/09/2024 05:51 PM

கோத்தா பாரு, 11 செப்டம்பர் (பெர்னாமா) -- சுடும் ஆயுதம் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் சுற்றுலா நிறுவன நிர்வாகி, ஹபிசுல் ஹவாரின் வழக்கு விசாரணைக்காக டிசம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளை, கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்தது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி, சுல்கிப்ளி அப்துல்லா அத்தேதிகளை நிர்ணயித்தார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் விசாரணை தொடங்கும் முன்னர், பிரதிநிதித்துவ மனுவை அனுப்புமாறும் நீதிபதி சுல்கிப்ளி கோரிக்கை விடுத்துள்ளார்.

முந்தைய வழக்கு விசாரணையின்போது, இவ்வழக்கை சிலாங்கூருக்கு மாற்றுவதற்கான எந்த உத்தரவையும் தமது தரப்பு பெறவில்லை என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர், அஹ்மட் பைஸ் ஃபித்ரி முஹமட் தெரிவித்தார்.

சிலாங்கூரில், கொலை முயற்சி வழக்கு தொடர்பான பிற குற்றச்சாட்டுகளையும் ஹபிசுல் எதிர்நோக்கியுள்ளதால், இவ்வழக்கை சிப்பாங் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி அவரது வழக்கறிஞர் நிக் முஹமட் ஃபரிஸ் ஷஸ்வான் விண்ணப்பித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)