பொது

மக்களின் பிரச்சனை & ஊக்கமளிக்கும் பொருளாதார வெற்றி - மடானி அரசாங்கம் சாதித்துள்ளது

13/09/2024 05:53 PM

புக்கிட் கியாரா, 13 செப்டம்பர் (பெர்னாமா) --  ஆட்சியைக் கைப்பற்றி 22 மாதங்கள் பூர்த்தியடையும் நிலையில், குறிப்பாக வாழ்க்கைச் செலவினம் உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையாள்வதில் ஒருமைப்பாட்டு அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அதேவேளையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் கீழ் ஊக்கமளிக்கும் பொருளாதார வெற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் போது அரசாங்கத்தின் பிரதான சவாலாக இருந்தது பொருளாதார பிரச்சனை என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு INTAN அமைச்சர் மாநாட்டில் உரையாற்றியபோது ஃபஹ்மி அவ்வாறு கூறினார்.

நாட்டின் வளர்ச்சி நிலையானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மடானி பொருளாதாரக் கட்டமைப்பின் மூலமாக அரசாங்கம் ஒரு புதிய தடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டு முதல் காலாண்டில், 2030 புதிய தொழில்துறை முதன்மைத் திட்டம் மற்றும் தேசிய ஆற்றல் மாற்றத் திட்டம் NETR ஆகியவற்றின் முதலீட்டின் அளவும் அதிகரித்துள்ளதாக ஃபஹ்மி சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் மதிப்பும், நான்கு ரிங்கிட் 31 சென்னாக ஆக வலுவடைந்திருப்பதும், தேசியப் பொருளாதாரத்தின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் புலப்படுத்துவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.

''தற்போது, ஒரு அமெரிக்க டாலருக்கு 4.31-ஆக ரிங்கிட்டின் மதிப்பு உள்ளது. மேலும் தற்போதைய நிலைமை சீராக உள்ளதால் இந்நிலை மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்'', என்று அவர் கூறினார்.

நடப்பு அரசாங்கத்தின் கீழ், 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் பேசப்பட்ட 11 விவகாரங்களில் ஏழு நிர்வாக விவகாரங்களுக்குக் கடந்த ஈராண்டு காலகட்டத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளதையும் ஃபஹ்மி தெளிவுப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)