பொது

அவமானங்களை எதிர்கொள்ளத் தயங்கினால் வெற்றி பெற முடியாது 

13/09/2024 06:03 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  அவமானங்களைக் கண்டு அஞ்சி பின்வாங்கிவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினமே.

இந்த வரிகளே தம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், அனைவராலும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாகவும் கூறுகிறார் இவ்வாண்டு தமிழ் நாடு, தனியார் தொலைக்காட்சியில் ஒளியேறிய சூப்பர் சிங்கர் பாடல் போட்டியின் முதல் நிலை வெற்றியாளரான ஜோன் ஜெராம்.

சென்னை கள்ளக்குறிச்சியில் பிறந்து வளர்ந்த ஜோனுக்கு சிறுவயது முதலே இசையின் மீது அளவு கடந்த காதல்.

ஆனால் அன்றைய சூழ்நிலையில் முறைப்படி சங்கீதமோ அல்லது இசையோ கற்றுக் கொள்ள சூழலும் வாய்ப்பும் அமையாததால், இசைக் கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த தமது தந்தையுடன் இணைந்து கிடைக்கும்  பாடல்களைப் பாடி வந்துள்ளார்.

அப்படி ஓர் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட அவமானமே தம்மைப் பட்டைத் தீட்டியதாக அவர் கூறினார்.

''ஒரு நாள் பெரிய கச்சேரி ஒன்றில் கலந்து கொள்ள அப்பாவுடன் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த அப்பா அவர்கள் முன் என்னை பாட வைக்க விரும்பி அழைத்தார். ஆனால் நான் செல்வதற்குள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர், இது என்ன கச்சேரியா அல்லது பயிற்சி நேரமா என்று என்னை கடுமையாக வசைப்பாடி விட்டார். கடைசி வரைக்கும் அவர் எனக்கு பாட வாய்ப்பு தரவில்லை. வாங்கிய ஒலிவாங்கியை  மீண்டும் ஏற்பாடாளரிடமே கொடுத்துவிட்டு மேடையை விட்டு இறங்கினேன்,'' என்று அவர் தெரிவித்தார்.

அன்று அந்தக் கச்சேரியில் தாம் பாடினால் அனைவரும் எழுந்து போய்விடுவார்கள் என்று அவர் கூறிய நிலையில், இன்று அதே மேடையில் பல ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் பல இசை நிகழ்ச்சிகளில் தாம் பாடியிருப்பது அந்த அவமானத்திற்கு கிடைத்த பரிசு என்கிறார் ஜோன் ஜெராம். 

மேலும், இசை குறித்து அடிப்படைக் கூட தெரியாத நிலையில், சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் கலந்து கொண்டது தமக்கு மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் ஜோன் கூறுகிறார்.

''ஶ்ரீ வர்த்தினி என்பவரே என்னை செதுக்கி எனக்கு முழுமையாக பயிற்சி அளித்து வந்தார். என்னுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் நகர்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பெரும்பாலோர் இசைக் கற்று வந்து போட்டியில் கலந்திருந்தனர். அப்போது எனக்குள் இருந்த பயத்தை போக்கி ஒரு அம்மாவைப் போன்று அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். அவர் இல்லை என்றால் இன்று என்னால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது,'' என்றும் ஜோன் விவரித்தார்.

அவ்வாறு, கிழக்கு வாசல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடி பறந்த கிளி பாடலை தாம் முதன் முதலாக பயிற்சி பெற்றதாகக் கூறிய ஜோன், இறுதியில், அப்பாடலே தம்மை சூப்பர் சிங்கரில் வாகை சூட வைத்ததாகவும் கூறினார்.

பொதுவாக பெரிய அளவிலான பாடல் திறன் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு திரைப்படத்தில் பாடுவதற்கு ஒன்றிரண்டு வாய்ப்புகளாவது கிடைக்கும்.

ஆனால் அந்த வாய்ப்பு தமக்கு இன்னும் கிட்டவில்லை என்பதையும் அவர் புன்முறுவலோடு தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கும்.

அதை அறிந்து, யாருக்கும் பயப்படாமல், நம்மால் முடியும் என்று நினைத்தால் அனைவராலும் சாதிக்க முடியும் என்று பெர்னாமா செய்திகள் உடனான  நேர்காணலில் ஜோன் ஜெராம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)