பொது

மதுபானங்கள் கடத்தல் நடவடிக்கையை முறியடித்தது ஜே.கே.டி.எம்

13/09/2024 07:26 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மதுபானங்களைக் கடத்தும் நடவடிக்கையை, அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் வரி மதிப்பு, ஒரு லட்சத்து 30,000 ரிங்கிட்டாகும்.

சுங்கப் பாரத்தில் போலி தகவல்களை வழங்கி மதுபானங்களின் உண்மையான மதிப்பை அறிவிக்காமல் இக்குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டதாக, அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய மண்டல துணைத் தலைமை இயக்குநர் நோர்லேலா இஸ்மாயில் தெரிவித்தார்.

முதல் வழக்கில், கிள்ளான் வட துறைமுகத்தில் 40 அடி கொள்கலன் மூலம் சுங்க வரிக்கு உட்படுத்தப்படாத மதுபானங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட அவற்றை கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நோர்லேலா விவரித்தார்.

7,500 ரிங்கிட் மதிப்புடைய 1,372 லிட்டர் மதுபானங்கள் தமது தரப்பு மேற்கொண்ட சோதனையில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதன் வரி மதிப்பு 17,350 ரிங்கிட் ஆகும்.

தளவாடம் என்று அந்த சுங்கப் பாரத்தில் குறிப்பிடப்படிருந்த நிலையில் அமலாகத் தரப்பை ஏமாற்றும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அந்த மதுபானங்கள் கொள்கலனின் பின்புறத்தில் இதர பொருள்களுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தன.

40 அடி கொள்கலன் மூலம் 22,800 ரிங்கிட் மதிப்புடைய 3,530 லிட்டர் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டதாக இரண்டாவது வழக்கு பதிவாகியுள்ளது.

அதன் வரி மதிப்பு 70,000 ரிங்கிட்டாகும்.

1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் செக்‌ஷன் 135 உட்பிரிவு-(1)(a)-இன் கீழ் இவ்விரு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)