பொது

மீட்கப்பட்ட 13 சிறார்கள் முறையற்ற பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது

13/09/2024 08:10 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  அண்மையில் அரச மலேசிய போலீஸ் படை PDRM, தொண்டு இல்லங்களில் நடத்திய Op Global சோதனை நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட சிறார்களின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேர் முறையற்ற பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

உணர்வு, மனநலம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிப்பு உட்பட உடலில் பழைய, புதிய காயங்களுடன் 172 சிறார்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார். 

''இரண்டாம் தேதி நெகிரி செம்பிலானிலும் சிலாங்கூரிலும் கிடைத்த புகார்களில் நால்வர் முறையற்ற பாலியல் உறவில் உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 14-இன் கீழ் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலும் ஒன்பது பேரை நாங்கள் விசாரித்தோம். எனவே, மொத்தமாக 13 பேர்,'' என்றார் அவர்.    

இன்று, கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அத்தகவல்களை வழங்கினார். 

முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்கள் மீது 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் நான்கு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.  

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம், சட்டம் 611, மற்றும் 2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கடத்தல் சட்டம், சட்டம் 670 ஆகிய சட்டங்களை உட்படுத்தியும் இதுவரை 24 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக ரசாருடின் குறிப்பிட்டார். 

கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட Op Global சோதனை நடவடிக்கையின் மூலம் காப்பாற்றப்பட்ட 402 பேரில், இதுவரை 202 ஆண்களும் 190 பெண்களும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)