சிரம்பான், 25 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள கிறிஸ்துவர்கள் விசிடேஷன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் ஒன்றான நெகிரி செம்பிலானில், காலையில் மழை தூரல் தொடங்கிய போதிலும், அதை பொருட்படுத்தாது அம்மாநில கிறிஸ்துவர்கள் 300 பேர் அத்தேவாலயத்தில் கூடினர்.
''ஆண்டவரின் பிறப்பு விழாவை குடும்பத்தோடும், தேவாலயத்தில் உள்ளவர்களுடனும் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்று ஜெசலின் சிவராஜா என்பவர் கூறினார்.
''ஏசு கிறிஸ்துவர்களுக்கு மட்டும் தான் பிறந்தார் என்று இல்லை. அனைவருக்கும் ஒரு ரட்சகராகவும் மீட்பவராகவும் இருக்கிறார். எனவே, காலை திருப்பல்லியில் அனைவருக்காகவும் இறைத் தொழுதலில் வேண்டி இருக்கிறோம்,'' என்கிறார் ரேமண்ட் பிரான்சிஸ்.
வழக்கம்போலவே இவ்வாண்டும் இந்தத் தேவாலத்தில் மக்கள் கூட்டம் குறையாமல் இருப்பதைக் காண முடிவதாகக் கூறிய அவர்கள், இந்தத் தேவாலயம் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் வண்ண விலக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படிருப்பதைக் காண, மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள புனித செயின்ட் யேன் தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தை தொடங்கினர்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமைவாய்ந்த இந்த தேவாலயத்தில் காலை தொடங்கியே, கிறிஸ்தவர்களுடன் பல்வேறு இனத்தவர்களும் கூடியிருந்ததை காணமுடிந்தது.
புத்தாடைகள் அணிந்து, குடும்ப உறுப்பினர்களுடன் தேவாலயத்திற்கு வந்தவர்கள் பழைய தேவாலய கட்டிடம் முன்பு புகைப்படங்களை எடுக்கும் வாய்ப்பையும் தவறவிடவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)