அம்பாங், 25 டிசம்பர் (பெர்னாமா) - அனைவருமே சமம், பகிர்ந்து உண்பதே பலம், அன்பால் அனைத்தையும் வெல்வோம் போன்ற உயரிய மாண்புகளை, மனித குலத்திற்கு பறைசாற்றும் விதமாக விண்ணிலிருந்து மண்ணில் உதித்த, இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை இன்று உலகமே கொண்டாடி மகிழ்கின்றது.
மாட்டுக் கொட்டகையில் பிறந்த அப்பாலகனை, உள்ளத்திலும், இல்லத்திலும் வரவேற்கும் பொருட்டு பலரின் வீடுகள் இன்று ஆனந்தத்தில் திளைத்திருக்கும்.
அத்தகைய மகிழ்ச்சியில் நிறைந்திருந்த, சிலாங்கூர், அம்பாங், தாமான் கோசாசில் வசிக்கும் புஷ்பராஜ் - கிரேஸ் தம்பதியரின் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத் தருணங்களுடன் செய்தியாளர் கிரிஸ்ட் சின்னப்பன்.
டிசம்பர் 25இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப்பட்டாலும் அம்மாதத் தொடக்கத்திலே அதற்கான முன்னேற்பாட்டு வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கிவிடும்.
குறிப்பாக, டிசம்பர் முதலாம் தேதியே வீட்டின் பீடத்திற்கு அருகில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு விட்டதாகக் கூறிய குடும்பத் தலைவர் புஷ்பராஜ் மாசிலாமணி, கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் அவரின் மீட்புக்கான அடையாளமாகவே, இம்மரத்தை வைப்பதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் மரத்திற்கு அடுத்தபடியாக, இறைமைந்தனின் பிறப்பை அறிவிக்கும் விதமாக வீட்டில் குடில் அமைக்கப்பட்டிருக்கும்.
அக்குடிலில் ஆடு, மாடுகளுக்கு நடுவே, வைக்கோல் வைத்து அந்த வைக்கோலின் மீது குழந்தை இயேசுவை படுக்க வைத்து, அதன் அருகில் அன்னை மரியாள், தந்தை சூசையப்பர் ஆகியோருடன் இயேசுவின் பிறப்பு காலத்தில் உடன் இருந்தவர்கள் என்று அறியப்பட்ட மேலும் சிலரின் சிற்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
திருவகைக் காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால், வீட்டிலுள்ள இறைப் பீடத்தை வெள்ளை அல்லது தங்க நிறத்திலான துணிகளைக் கொண்டே தாம் அலங்கரிப்பதாக புஷ்பம் மாசிலாமணி கூறினார்.
இக்கொண்டாட்டத்திற்கு இடையில், சிலாங்கூர், தென்ன மரத் தோட்டத்தில் தாம் கொண்டாடி மகிழ்ந்த இளம்பருவத்து கிறிஸ்துமஸ் நினைவலைகளை, புஷ்பராஜின் தாயாராகிய 63 வயதுடைய சிசிலி ஞானபிரகாசம் பகிர்ந்து கொண்டார்.
இக்களிப்பின் முத்தாய்ப்பாக, இறைமகனின் பிறப்பு நற்செய்தியை வீடு வீடாகச் சென்று அறிவிக்கும் கேரலிங்கின் போது, கிறிஸ்துமஸ் தாத்தாவும் வருகைப் புரிந்து சிறுவர்களுக்கு இனிப்புகளும் பரிசுகளும் வழங்கி மகிழ்விப்பார்.
இத்தனை மகிமைகள் நிறைந்த இந்நாளை குடும்பத்தார், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமில்லாமல், வசதி குறைந்தவர்களையும், மற்ற இனத்தவர்களையும் அழைத்து, அவர்களோடும் மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொள்வதிலே இப்பெருநாளின் உண்மையான மகத்துவம் அடங்கியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் ஒன்றான நெகிரி செம்பிலானில், காலையில் மழை தூரல் தொடங்கிய போதிலும், அதை பொருட்படுத்தாது அம்மாநில கிறிஸ்துவர்கள் தேவாலயத்தில் கூடினர்.
சிரம்பானில் உள்ள, விசிதேஷன் தேவாலயத்தில் கூடிய சுமார் 300 கிறிஸ்துவர்கள் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
வழக்கம்போலவே இவ்வாண்டும் இந்தத் தேவாலத்தில் மக்கள் கூட்டம் குறையாமல் இருப்பதைக் காண முடிவதாகக் கூறிய அவர்கள், இந்தத் தேவாலயம் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் வண்ண விலக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படிருப்பதைக் காண, மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைப்பதாக தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)