பொது

முறைக்கேடான தொண்டு இல்லங்களில் சிறு வயதிலேயே சேர்க்கப்பட்ட குழந்தைகள்; தொடரும் விசாரணை

13/09/2024 08:17 PM

கோலாலம்பூர், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  இரண்டு வயதிலேயே தமது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் வழிநடத்தும் தொண்டு இல்லங்களில் சேர்க்கப்படுவதாக டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் கூறினார்.  

பெற்றோர்களின் சுய விருப்பம் அல்லது  அந்நிறுவனத்தின் கட்டளையின் பேரில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து, தமது தரப்பு விசாரணை செய்து  வருவதாக அவர் தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட குழந்தைகள் அனைவரும் மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலோர் தொண்டு இல்லங்கள் மற்றும் அந்நிறுவனம் வழிநடத்தப்படும் பராமரிப்பு மையங்களில் வளர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.    

''அந்நிறுவனம் வழிநடத்தும் பராமரிப்பு மையங்களில் தான் அவர்கள் வளர்ந்தார்கள். இரண்டு வயதிலேயே குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தை ஒரு தொண்டு இல்லத்தில் வைக்கப்படும். எங்களிடம் தகவல் உள்ளது. பெற்றோர்கள் கடந்த ஆறு மாதங்களாக சவூதி அரேபியாவில் இருக்கின்றனர், அவர்களின் குழந்தை இங்கு உள்ளது. பெற்றோர்கள் துருக்கியில் இருக்கின்றனர். ஆனால், குழந்தை இங்கே இருக்கிறது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

காப்பாற்றப்பட்ட குழந்தைகள் அனைவரும் முறையான கல்வி அறிவைப் பெற்றிருக்காதது, அவர்களுடனான  நேர்காணலின் போது தெரிய வந்ததாக அவர் கூறினார். 

எனினும், ஆள்கடத்தல் தடுப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்பு கடத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியக் கூறுகளைப் போலீஸ் நிராகரிக்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

''பாதிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்களை போலீசில் புகாரளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மோசடி வழக்கின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாவும் தகவல் உள்ளது. ஆக, இதில் பாதிக்கப்பட்டவர்களையும் எங்களின் விசாரணைக்கு முன்வர அறிவுறுத்துகிறோம்,'' என்றார் அவர்

இவ்வழக்கு தொடர்பாக செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இதுவரை 41 போலீஸ் புகார்களைத் தங்கள் தரப்பு பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 தொண்டு இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 171 பாதுகாவலர்கள், சமய போதகர்கள், தொண்டு இல்லத்தின் தலைவர்களை போலீஸ் கைது செய்தது.

இதில், ஒரு வயது குழந்தையிலிருந்து 17 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர் 402 பேர் காப்பாற்றப்பட்டனர்.   

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)