பொது

மக்கோத்தா இடைத்தேர்தல்; தே.மு - பி.என்-க்கு இடையில் நேரடி போட்டி

14/09/2024 06:44 PM

குளுவாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  இம்மாதம் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிற்கும், மக்கோத்தா  சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும், பெரிகாத்தான் நேஷனலுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.

இதில், இதற்கு முன்னர் அடைந்த மாநில தேர்தலின் வெற்றியைத் தக்க வைத்து கொள்ள, குளுவாங் தொகுதி அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் உசேன் சைட் அப்துல்லாவை தேசிய முன்னணி களம் இறக்கியுள்ள வேளையில், பெரிகாத்தான் நேஷனலைப் பிரதிநிதித்து ஜோகூர் மாநில முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் முஹமட் ஹைசான் ஜாஃபார் போட்டியிடுகிறார்.

குளுவாங், துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் காலை சுமார் 10 மணிக்கு மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.

பின்னர், சைட் உசேனும் முஹமட் ஹைசானும் இத்தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் என்று தேர்தல் நிர்வகிப்பு அதிகாரி அசுராவதி வாஹிட் அறிவித்தார்.

''மாநில தேர்தல் பிரிவின் நிர்வாக அதிகாரியான நான், N29 மக்கோத்தா தேர்தலுக்கான இரண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைப் பெற்றுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'', என்று அவர் கூறினார்.

முன்னதாக, காலை மணி 9-க்கு சைட் உசேனும், அடுத்த ஐந்து நிமிடத்தில் முஹமட் ஹைசானும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குளுவாங்கில் உள்ள என்சே' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதுடைய டத்தோ ஷாரிஃபா அசிசா சைட் செயின் சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து, இந்த இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.

இந்தச் சட்டமன்ற இடைத்தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)