பொது

NST-யின் முன்னாள் பணியக தலைவருக்கு TABUNG KASIH@HAWANA உதவி

14/09/2024 07:44 PM

பெனாம்பாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  சபா, பெனாம்பாங்கில் உள்ள கம்போங் டாபாக்கில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள News Straits Times, NST-யின் முன்னாள் பணியக தலைவர் ரோய் அந்தோணி கோவ்வை, இன்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் சந்தித்தார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Tabung Kasih@HAWANA-வின் உதவித் தொகையைப் பெறும், 147-ஆவது பெறுநரான கோவிற்கு ஃபஹ்மி அதனை வழங்கினார்.

ஊடக பயிற்சியாளர்கள், முன்னாள் ஊடகவியலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு உதவிகரம் நீட்டும் நோக்கத்தோடு, 2023-ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினக் கொண்டாட்டத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை ஃபஹ்மி சுட்டிக் காட்டினார்.

பெர்னாமா செய்தி நிறுவனம் அந்நிதியை நிர்வகித்து வழங்கி வரும் வேளையில், சபா மாநிலத்தில் அவ்வுதவித் தொகையைப் பெறும் 12-வது பெறுநர் கோ ஆவார்.

''ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக பிரதமர் 20 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியுள்ளார். முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த உதவி தேவைப்படுபவர்களை உடனடியாகச் சென்றடைய வேண்டும் என்பதே'', என்று அவர் கூறினார்.

இதனிடையே, தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சரும், பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான YB டத்தோ இவோன் பெனடிக்கும், கோ வீட்டிற்கு வருகை மேற்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)