உலகம்

கிழக்கு ருமேனியாவில் வெள்ளம்; ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்

15/09/2024 06:19 PM

கிழக்கு ருமேனியா, 15 செப்டம்பர் (பெர்னாமா) -- கிழக்கு ருமேனியாவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது நால்வர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றன.

சில குடியிருப்பாளர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகளை அங்கிருந்து இடம் மாற்றவோ அல்லது அவசர சேவைகளின் உதவியைப் பெறவோ முடியாமல் இன்னல்களை எதிர்கொண்டனர்.

ருமேனியா மற்றும் செக் குடியரசில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மின்சார வசதியின்றி தவித்து வரும் நிலையில் அங்கு வரும் நாட்களில் கூடுதலாக மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் அதிகாரிகள் எச்சரிக்கையாக உள்ளனர்.

செக் குடியரசு

அதேவேளையில், கனமழை காரணமாக செக் குடியரசின் சில பகுதிகளில் சனிக்கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டது.

சுமார் 51,000 வீடுகளில் மின் சேவை இல்லாத நிலையில் அங்குள்ள வட மற்றும் வடகிழக்குப் பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியதாக CTK செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.

அதோடு, ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை கடந்ததால் செக்-போலந்து எல்லைப் பகுதியி உள்ள சில நகரங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)