பொது

மஇகா-வின் 78வது பொதுப் பேரவை

15/09/2024 07:12 PM

ஷா ஆலாம், 15 செப்டம்பர் (பெர்னாமா) --  இந்திய சமூகத்தை பிரதிநிதிக்கும் மிகப் பெரிய கட்சியான மஇகா, அரசாங்க பலத்துடன் செயல்பட்டாலும் அல்லது தனித்து நின்றாலும், இந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எப்போதும் அரணாக இருக்கும்.

ம.இ.கா தலைவர்கள் அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் வகிக்காமல் அதிகாரம் இல்லாததுபோல் காணப்பட்டாலும், அக்கட்சியின் முக்கியத்துவத்தையும் சேவைகளையும் மக்கள் நன்கு அறிந்திருப்பர் என்று அதன் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில், இந்தியர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் இக்கட்சி மீண்டும் அதன் பழைய வலிமையைப் பெற ஆக்ககரமான செயல்களை மேற்கொண்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரையிலும் ம.இ.கா கண்ணியத்தோடும் தெளிவான திட்டமிடலோடும் செயல்பட்டு வருவதை கோடி காட்டிய டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அதன் ஒரு பகுதியாக தற்போது கட்சியில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டார்.

அவற்றில் ஒன்றாக, புதிய உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்கும் கால அவகாசம் அடுத்த மாதம் அக்டோபர் மாதத்தோடு நிறைவு பெரும் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதற்கு முன்னர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், பல குழப்பங்கள் எழுந்ததைத் தொடர்ந்து தற்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

"இந்த மாதம் பத்தாவது மாதம் அதாவது அக்டோபருடன் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது இல்லை. இப்போ ஒன்பதாவது மாதம். அடுத்த மாதம் இறுதிக்குள் யாரெல்லாம் உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் செய்ய நினைக்கின்றீர்களோ, செய்யுங்கள். அதையெல்லாம் சரிபார்த்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் பணம் செலுத்தி விடுங்கள்", என்று அவர் கூறினார்.

அதோடு, மஇகாவின் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அது இக்கட்சியின் அடையாளமாக விளங்கவிருப்பதோடு, பொருளாதார ரீதியில் சில நன்மைகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

"செந்த காலில் நமது கட்சியை வழிநடத்த முடியும், இளைஞர்களைச் சீர்படுத்த முடியும், மகளிருக்கு உதவி செய்ய முடியும், தனித்து வாழும் தாய்மார்கள், தீய செயல்களில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எல்லாதுக்கும் நமக்கு எம்.ஐ.இ.டி இருக்கு. அரசியலுக்கு நம்ப கட்சி வலுவான கட்சியா இருக்க தான் இந்த கட்டடம் அதோடு வருமானம்", என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களுக்கு இளங்கலை கல்வி வாய்ப்பை வழங்குவதற்காக, 2001-ஆம் ஆண்டு முதல் கெடாவில் செயல்பட்டு வரும் AIMST பல்கலைக்கழகம் போன்று சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மற்றொரு AIMST கல்லூரியின் நிர்மாணிப்புப் பணிகள் அடுத்த மாதம் நிறைவு பெருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனின் கொள்கை உரை குறித்து மஇகா துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

"கட்சியுடைய எதிர்காலம், கட்சி எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்புகள், கட்சி எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட இலக்கு, எதை நோக்கி நம் பயணம் அமைய வேண்டும். அதே நேரத்தில் கட்சிக்கு எங்கே உரிய அங்கீகாரம் கிடைக்கின்றதோ அதை நோக்கி நம்முடைய அடுத்தக்கட்ட இலக்கு இருக்க வேண்டும் என்பதை தேசிய தலைவர் தமது உரையில் கோடி காட்டியிருக்கின்றார்", என்று அவர் கூறினார்.

இன்று, சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள IDCC மாநாட்டு மையத்தில் காலை மணி 7 அளவில் தொடக்கம் கண்ட மஇகா-வின் 78-வது பொதுப் பேரவையில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரத்து 700 உறுப்பினர்களும் பேராளர்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மஇகா பொதுப் பேரவையில் டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் ஆற்றிய கொள்கை உரை கட்சியின் சீர்த்திருத்ததிற்குப் புதிய சிந்தனையை அளித்துள்ளதாக பேராளர்கள் சிலர் கூறினர்.

"மிகவும் திருப்தி அளிக்கக் கூடிய விஷயங்களைத் தான் அவர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக, மஇகா-வை எப்படி வலுப்படுத்துவது, மக்களின் நெருங்கிய ஆதரவு குறித்து அவர் பேசி இருந்தார். இம்மாதிரியான முயற்சிகளைத் தான் நாம் எடுத்தாக வேண்டும். எனவே தான் மக்களின் ஆதரைப் பெற முடியும்",என்று  கெடா, பாடாங் செராய் தொகுதியின் உறுப்பினர் டாக்டர் சுரேஷ் முத்துசாமி கூறினார்.

"இன்றைக்கு கட்சி எந்த அளவிற்கு பலத்தோடு இருக்கிறது. எந்த அளவிற்கு சொத்து மதிப்போட இருக்கிறது, நாளைக்கு நீங்கள் தலைவராக வந்தால் கட்சியில் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று கூறினார். ஆக, அந்த அளவிற்கு பலப்படுத்தி இருக்கும்போது எங்களின் மகளிர் பிரிவும் அந்த அளவிற்கு பலத்தோடு இருப்பதை நாங்கள் உணர்கிறோம்", என்று கூறினார் பகாங் மாநில மகளிர் தலைவி இன்பவள்ளி ரெங்கநாதன்.

இளைஞர், மகளிர், புத்ரா மற்றும் புத்ரி பிரிவினர் கலந்து கொண்ட இம்மாநாட்டில், இந்திய மக்களுக்கான அரசாங்க உதவிகள், வேலை வாய்ப்புகள், கல்வி போன்ற விவகாரங்கள் குறித்தும் பேராளர்களின் விவாதம் அமைந்தது.
  
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)