பொது

விரிவான ஆய்வுக்குப் பின்னரே ஹலால் சான்றிதழ் தொடர்பில் முடிவெடுக்கப்படும்

16/09/2024 04:32 PM

புத்ராஜெயா, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  ஹலால் சான்றிதழ் தொடர்பான எந்தவொரு முடிவும் ஒரு விரிவான ஆய்வு மேற்கொண்ட பின்னரே எடுக்கப்படும்.

இந்த ஆய்வு அறிக்கை அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முதலில் சமர்ப்பிக்கப்படும் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஹமாட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

"ஹலால் என்ன என்பது தொடர்பான வரைவை நாங்கள் தயாரித்துள்ளோம். ஹலால் சான்றிதழைக் கட்டாயமாக்குவதற்கான முன்மொழிவு தொடர்பான வரைவை நாங்கள் தயார் செய்துள்ளோம். அது ஒரு நீண்ட செயல்முறையைக் கொண்டிருக்கும். நான் அவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணம், தற்போது ஹலால் சான்றிதழ் தன்னார்வ முறையில் உள்ளது", என்று அவர் கூறினார்.

ஹலால் தொடர்பான விவகாரங்களை துல்லியமாக ஆராய தமது அமைச்சு சிறப்புக் குழுவை நிறுவவுள்ளதாகவும் அவர் கூறினார்.

துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கும், தரவுகளின் அடிப்படையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த சிறப்பு குழு பல்வேறு தரப்பினரைக் கொண்டிருக்கும் என்று டாக்டர் முஹமாட் நாயிம் விளக்கினார்.

மேலும், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் தயாரிக்கும் ஹலால் உணவுகளைப் பிரித்து வைத்தல் தொடர்பாகவும் கவனமாக ஆய்வு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
  
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)