பொது

வன்கொடுமையிலிருந்து மீட்கப்பட்டவர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்தும்

16/09/2024 04:44 PM

புத்ராஜெயா, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  GLOBAL IKHWAN SERVICE AND BUSINESS HOLDING, GISBH எனும் நிறுவனத்துடன் தொடர்புடைய தொண்டு இல்லங்களில் இருந்து காப்பாற்றப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனில் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கும்.

அவர்களின் நலன், குறிப்பாக உளவியல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுந்த ஆதரவையும் பாதுகாப்பையும் பெறுவது உறுதிசெய்யப்படும் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர்  டத்தோ டாக்டர் முஹமாட் நாயிம் மொக்தார் தெரிவித்தார்.

"போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள். நாங்கள் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். குழந்தைகளின் நலனுக்காக ஐ.ஜி.பி.யுடன் நான் தொடர்பு கொண்டு வருகிறேன். ஜே.கே.எம், டத்தோ ஶ்ரீ நேன்சி மூலம் போலீஸ் சோதனை செய்தபோது கைது செய்யப்பட்ட குழந்தைகளையும் பெண்களையும் எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து முக்கியத்துவம் வழங்கப்படுகிறது", என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்ய, தமது அமைச்சு அரச மலேசிய போலீஸ் படை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக டாக்டர் முஹமாட் நாயிம் குறிப்பிட்டார்.

இதனிடையே, மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் நடத்திய தொண்டு இல்லங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய சிறப்பு செயற்குழுவிற்கு உதவுவதற்கு, GISB Holdings நிறுவனத்தின் முன்னாள் தொடர்பாளர்கள் விரைவில் அழைக்கப்படுவர் என்று டத்தோ டாக்டர் முஹமாட் நாயிம் தெரிவித்தார்.

அண்மையில், GISB Holdings நிறுவனத்தைப் பற்றி விரிவான விசாரணை மற்றும் ஆய்வை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு குழுவிற்கு, அந்நிறுவனம் தொடர்பான தகவல்களை இந்த முன்னாள் தொடர்பாளர்கள் வழங்குவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

"சரியான தகவல்களைப் பெறுவதற்கு பிறகு நாங்கள் ஜி.ஐ.எஸ்.பி நிறுவனத்தின் முன்னாள் தொடர்பாளர்களை அழைப்போம்", என்றார் அவர்.

GISB Holdings நிறுவனத்தின் நிலையைத் தீர்மானம் செய்ய, சம்பந்தப்பட்ட அறிக்கைகள், இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் சிறப்பு MUZAKARAH செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)