பொது

மீலாது ரசூல் தினக் கொண்டாட்டம்; மாமன்னர் தம்பதியர் பங்கேற்பு

16/09/2024 05:46 PM

புத்ராஜெயா, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  இன்று, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம், PICC-யில் நடைபெற்ற தேசிய அளவிலான மீலாது ரசூல் தின கொண்டாட்டத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும், பேரரசியார் ராஜா சாரித் சோஃபியாவும் கலந்து கொண்டனர்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தை வந்தடைந்த அவர்களை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா டாக்டர் வான் இஸ்மாயிலும் வரவேற்றனர்.

இக்கொண்டாட்டத்தின்போது, 2024-ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான மீலாது ரசூல் விருதையும் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்.

இவ்வாண்டின் தேசிய அளவிலான மீலாது ரசூல் விருதை, டாத்து கிப்லி யாசின் பெற்றார்.

அதோடு, டத்தின் அமினா சக்காரியா, டத்தோ அப் ஜமால் துன் டிஎஸ்பி டாக்டர் சாகரன், டத்தின் டாக்டர் கத்திஜா முஹமட் யூசோப், பேராசிரியர் எமிரிட்டஸ் டாக்டர் ஷாஹாரிர் முஹமட் செயின், சாரியா இப்ராஹிம் மற்றும் மைக்கில் தோங் வாய் சியோங் ஆகியோர் 2024-ஆம் ஆண்டிற்கான தேசிய அளவிலான மீலாது நபி விருதைப் பெற்றனர்.

"Al-Falah Pemacu Malaysia Madani" எனும் கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இவ்வாண்டின் மீலாது ரசூல் விழாவில் 131 அரசாங்கம்-தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் உட்பட 6,000 பேர் கலந்து கொண்டனர்.

நபியின் பிறப்பை நினைவுகூரும் விதமாகவும் அவரது வாழ்க்கை, போராட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொண்டு பின்பற்றவும் வருடாந்திர கொண்டாட்டமாக இந்த மீலாது ரசூல் விழா கொண்டாடப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)