சிறப்புச் செய்தி

பண்பாட்டைப் பறைசாற்றும் ஆலய மாட்டுப் பொங்கல்

15/01/2025 08:20 PM

செந்தூல், 15 ஜனவரி (பெர்னாமா) - விவசாயத்தில் உழவர்களுக்கு கைக்கொடுக்கும் உயிரினமாக மாடுகள் உள்ளன.

தற்போதைய நவீன காலகட்டத்தில் இயந்திரங்களின் உதவியுடன் விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியர்களின் வாழ்வில் மாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த வகையிலேயே, மாடுகளுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் மலேசியாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றன.

பெரும்பாலும் மாட்டுப் பண்ணைகளில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் சில ஆலயங்களில் உள்ள கோசாலை அல்லது பசுமடம் எனப்படும் மாட்டுத் தொழுவங்களிலும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

70, 80ஆம் ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல ஆலயங்களில் கோசாலையும் நந்தவனமும்  அமைக்கப்பட்டிருக்கும். 

கோசாலையிலிருந்து கிடைக்கும் பசும்பாலை ஆலய அபிஷேகத்திற்கும், நந்தவனத்தில் இருந்து கிடைக்கும் பூக்களை ஆலய பூஜைக்கும் அப்போது பயன்படுத்தி வந்தனர்.

கால மாற்றத்தில்,  பல ஆலயங்களில் அந்த வழக்கம் மறைந்து வந்தாலும் கோலாலம்பூர் செந்தூல் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று வரை அது பின்பற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக இங்கு உள்ள எட்டு மாடுகள் மற்றும் நான்கு கன்றுகளுக்கு தொழுவம் அமைத்து இதர வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துஅவற்றை முறையாக வளர்த்து வருவதாக ஆலயத்தின் செயலாளரும் பொருளாளருமான மெய்யப்பன் மாணிக்கம்.

"இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் கடினமானது என்றாலும் தொன்று தொட்டு அதைப் பின்பற்றி வருவதால் விடுவதற்கு மனமில்லை. மாடுகளைப் பராமரித்து கொள்ள முறையான இடம், அதற்கொரு பராமரிப்பாளர், அதற்கு வேண்டிய தீவணம் அனைத்தும் தினசரி கவனிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இப்பசுக்களில் இருந்து கரக்கப்படும் பாலைக் கொண்டே ஆலயத்தில் தினமும் அபிஷேக ஆராதனை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும்  மேலாக ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இன்றைய கொண்டாட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

"ஆண்டுதோறும் முதல்நாளே மாடுகளை சுத்தமாக குளிப்பாட்டி, அலங்கரிப்போம். பின்னர் மறுநாள் காலையில் பொங்கல் வைத்து அதற்கு ஊட்டிவிடுவோம். மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கல் ஏற்காது என்பதால், வெண்பொங்கல் மட்டுமே படைக்கப்படும்," என்றார் அவர்.

காலை மணி 10-க்கு ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் வைக்கத் தொடங்கினர்.

பொங்கல் சமைத்த பிறகு அங்குள்ள மாடுகளுக்கும் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.

ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக மாடுகளுக்கு பொங்கல், வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர்.

வேலை நாள் என்பதால், ஆலயத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)