புத்ராஜெயா, 15 ஜனவரி (பெர்னாமா) -- புஸ்பாகோம் (PUSPAKOM) எனப்படும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையங்களில் வாகன பரிசோதனை நடவடிக்கையை உட்படுத்திய நேர்மைநெறி பிரச்சனையைக் கையாள அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.
புஸ்பாகோமின் குத்தகை கடந்த ஆண்டில் முடிவடைந்தாலும் அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட தற்காலிக உரிமம் வழங்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
''பதிவுசெய்யப்பட்ட வாகனங்களைப் பரிசோதிக்க மற்ற நிறுவனங்களும் செயல்பட, கூடுதல் உரிமம் வழங்க இதர சில நிறுவனங்களை நாங்கள் மதிப்பிட்டு வருகிறோம். எனவே, கொள்கை அளவிலான முடிவு உள்ளது. அதோடு, இந்த வாகனங்களைப் பரிசோதிக்க மேலும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் தேர்வுகள் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அவ்வாறு குறிப்பிட்டார்.
முகவர்களுடன் சேர்ந்து ஊழல் நடவடிக்கையில் புஸ்பாகோம் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டிருப்பது திடீர் விசாரணையில் தெரிய வந்ததை லோக் சுட்டிக்காட்டினார்.
அதனால்தான், சந்தேக நபர்களும் ஆதாரங்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் இடம் ஒப்படைக்கப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]