பொது

2025 வரவு - செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான 3ஆம் கட்டப் பரிந்துரை உட்படுத்தப்படலாம்

17/09/2024 06:23 PM

ஜோகூர் பாரு, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- சிம்பாங் ரெங்காமில் இருந்து வட யோங் பெங் வரை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் மூன்றாம் கட்டத் திட்டத்திற்கான பரிந்துரை, 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உட்படுத்தப்படும் என்று பொதுப்பணி அமைச்சு நம்புகிறது.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலையில், வாகனமோட்டிகளின் பயன்பாட்டிற்காக மாநில அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும் என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் நம்பிக்கை தெரிவித்தார்.

''வட செனாயிலிருந்து செடெனாக் வரையில் 52 கோடியே 50 லட்சம் ரிங்கிட் செலவில் நான்கு தடங்கள் கொண்ட சாலையை ஆறு தடங்களாக விரிவுபடுத்துவது முதலாம் கட்ட பணியாகும். முதலாம் கட்ட பணி குறித்து அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் அதன் அறிவிப்பை செய்து, பணியையும் தொடங்கி விட்டோம். அதோடு, சம்பந்தப்பட்ட குத்தகையாளருக்கு எஸ்.எஸ்.டி வழங்கி விட்டோம்,'' என்றார் அவர்.

முன்னதாக இன்று, ஜோகூர் பாருவில், 2024ஆம் ஆண்டுக்கான 'Highway Concession' மாநாட்டை அஹ்மட் மஸ்லான் தொடக்கி வைத்தார்.

முதலாம் கட்டத்தில் செலவு செய்யப்பட்ட 52 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டின் அடிப்படையில், மூன்றாம் கட்ட திட்டத்திற்கு 100 கோடி ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அத்திட்டத்தை மேற்கொள்ள கடந்தாண்டு அக்டோபர் 12ஆம் தேதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)