அரசியல்

கெடா மந்திரி புசாரின் மன்னிப்புக் கோரல் கடிதத்தை சிலாங்கூர் சுல்தான் ஏற்றுக் கொண்டார்

26/09/2024 05:50 PM

ஷா ஆலாம், 26 செப்டம்பர் (பெர்னாமா) -- கெடா மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோரின் மன்னிப்புக் கோரல்  கடிதத்தை சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷா ஏற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 25-ஆம் தேதி எழுதப்பட்ட அக்கடிதத்தில் சிலாங்கூர் சுல்தானை இழிவாக பேசியதோடு, மரியாதையின்றி நடந்து கொண்டதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, தாம் வெளியிட்ட அக்கூற்றிற்கு முஹமட் சனுசி மன்னிப்புக் கோரியதாக Selangor Royal Office இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தது.

தாம் வெளியிட்ட கூற்று, சுல்தான் ஷாராப்புடினுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதோடு, அவரின் மனதையும் உணர்வையும் புண்படுத்தியிருப்பதை  முஹமட் சனுசி ஒப்புக் கொண்டார்.

தமது அக்கூற்றினால் ஏற்பட்ட அனைத்து எதிர்மறையான தாக்கத்தை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று கெடா, அலோர் ஸ்டாரில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்திலும், சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் மற்றும் பழித்துரைக்கும் வகையில் தாம் வெளியிட்ட கூற்று தொடர்பில் முஹமட் சனுசி வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.

மேலும், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அம்மாநில மக்கள் அனைவரிடமும் தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)