விளையாட்டு

காரணங்கள் சொன்னால் காரியம் சாதிக்க முடியாது - கே. திலகவதி

29/09/2024 06:30 PM

கூச்சிங், 29 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 பாரா சுக்மா விளையாட்டுப் போட்டி...

மாற்றுத்திறன், திருமணம், குடும்பம், நேரமின்மை போன்றவற்றை காரணமாக கூறாமல், அதனைக் கடந்து பாரா சுக்மா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்திருக்கின்றார், நாட்டின் அம்பெய்தல் வீராங்னை கே. திலகவதி

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு, சரியான நேர நிர்வகிப்பு, மற்றும் விடாமுயற்சி ஆகியவை தம்மை அம்பெய்தல் போட்டியில் வெற்றியாளராக உருவாக்கி உள்ளதாக கூறுகின்றார், கெடாவைச் சேர்ந்த இந்த சாதனை பெண்மணி.

எண்ணங்களை ஒன்றிணைத்து, கூர்ந்த பார்வையைக் கொண்டு அம்பெய்தும் இந்த விளையாட்டுப் போட்டி தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும்...

அது சீரிய இலக்கின் மூலம் தமக்கு வாழ்க்கை பாடத்தை போதிப்பதாகவும் திலகவதி குறிப்பிட்டுள்ளார்.

பிறவியிலேயே கால்களில் பாதிப்பைக் கொண்டதால், சிகிச்சையின் வழி செயற்கை கால் கொண்டு போட்டிகளில் பங்கேற்று வரும் இவருக்கு கணவர் மற்றும் மகனின் ஒத்துழைப்பும் பெரிய பலமாகி உள்ளது.

''திருமணமாகிவிட்டால் ஒருவரை தனியாக அனுப்ப சிரமப்படுவார்கள். ஆனால், எனது கணவர் எனக்கு ஆதரவாக இருந்து இதில் சாதனைப் படைக்க அனுப்பி வைத்தார். எனது கணவரும் மகனும் பயிற்சி இடத்திலும் எனக்கு உதவியாக இருப்பார்கள். பயிற்சி முடியும் வரை எனக்காக காத்திருப்பார்கள்,'' என்றார் அவர்.

எட்டு வயது மகனின் அன்புக்குரிய தாயாரான திலகவதி இதுவரை மூன்று பாரா சுக்மா போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அன்று தொடங்கிய அவரின் சாதனைகள் இன்று சரவாக் கூச்சிங் மண்ணிலும் தொடர்கின்றன.

நேரமில்லை, வாய்ப்பில்லை என்பதை எப்போதும் காரணமாக கூறாமல், கிடைக்கும் நேரத்தில் திறமைகளை வெளிப்படுத்தி, அதன் மூலம் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள பாரா விளையாட்டாளர்கள் மட்டுமல்ல, அனைவராலும் முடியும் என்பதை தமது வாழ்க்கையின் மூலம் திலகவதி மெய்பித்திருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)