பொது

தற்காலத் தமிழிசை மேம்பாட்டிற்கு வளம் சேர்க்கும் இளைய தலைமுறையினர்

11/10/2024 07:39 PM

கோலாலம்பூர், 11 அக்டோபர் (பெர்னாமா) --  தமிழர்களின் தனித்துவமிக்க இசைக் கூறுகளும் வரலாற்று மரபுகளும் தொன்று தொட்டு மறக்காமல் கலைஞர்களால் போற்றப்பட்டு வருகிறது. 

அதில், தற்காலத் தமிழிசை மேம்பாட்டிற்கு வளம் சேர்க்கும் பணிகளைச் செயல்படுத்தும் முயற்சிகளை இன்றைய இளைய தலைமுறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

பெரும்பாலும், மங்கள வாத்தியங்கள் இசைப்பதில் ஆண்கள் முதன்மையாக இருக்கும்  வரிசையில் பெண்களின் திறனும் இதில் கவனம் ஈர்க்க வைக்கும்  என்பதை நிரூத்து வருகின்றார் நாதஸ்வர இசைக் கலைஞர் அஞ்சலி கதிரவன். 

தமது ஏழாவது வயதில் சிதம்பர அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசை பயணத்தைத் தொடங்கியவர் அஞ்சலி கதிரவன் .

தமது குடும்பத்திலுள்ள அனைவரும் இசைத்துறையில் அதிக ஆண்டுக்காலம் இருந்து வந்ததால், தமது ஆர்வத்திற்கும் அது பிள்ளையார் சுழி போட்டதாக கூறினார்,  தமிழர் இசைக்கருவிகளைப் பெரிதும் மதிக்கும் அஞ்சலி. 

''மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டான பெண்ணாக அமைய வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தத் துறையில் அதிக அளவிலாக ஆண்களே இருந்து வருகின்றனர்.மலேசிய நாட்டைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நாதஸ்வரக் கருவியை வாசிக்கும் பெண்கள் அதிகம். இதுவே, எனக்கொரு தூண்டுதலாக அமைந்தது'', என்று அவர் கூறினார்.

புதுமையயும் தனித்துவத்தையும் விரும்பும் தாம், இசைத் துறையில் நாதஸ்வரக் கருவியைத் தேர்ந்தெடுத்தபோது அது பலரின் வரவேற்பைப் பெறவில்லை.

பல சவால்களைத் தாம் எதிர்கொண்ட போதிலும், எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காத அவர், தாம் கற்ற கலையைப் பிறருக்கும் கற்றுக் கொடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.

''மேலும், அகர இசை கல்லூரி ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். அதில் நிறைய மாணவர்கள் என்னுடன் குரலிசை, அதாவது கர்நாடக இசையக் கற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, பகுதிநேரத்தில் பல்லூடக ஆக்கத்திறத்தையும் கற்று வருகிறேன்'', என்று அவர் கூறினார்.

அதோடு,  இதர துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் இளையோர்கள் இசைத் துறையிலும்  கால்பதித்துச் சாதனை புரிய வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார். 

''இன்றைய தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இசைத் துறையில் சாதிக்க ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை என்பதால் நம்மிடையே ஒரு திறமை இருக்குமானால், அந்தத் திறமையை யார் என்ன சொன்னாலும், வெட்கம் கொள்ளாமல் அதனை வெளிப்படுத்த வேண்டும். நமது இலக்கை மனதில் நிறுத்தி, அதனை நோக்கி மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வாழ்த்துபவர்களுக்கு மத்தியில் குறை கூறுபவர்களும் இருக்கதான் செய்வார்கள். ஆனால், நாம் எதையும் யோசிக்காமல் மனதுக்கு நிறைவை அளிக்கும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டே சென்றால் நிச்சயம் சாதனையாளராக மாறலாம்'', என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் தமக்குப் பிடித்த துறையில் தனித்துவமாக செயல்பட முடியும் என்பதற்கு அஞ்சலியும் ஓர் உதாரணமாகி இருக்கின்றார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)