பொது

மடானி அரசின் ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டு வருகிறது - டாக்டர் சேவியர்

29/09/2024 09:17 PM

கோலாலம்பூர், 29 செப்டம்பர் (பெர்னாமா) -- டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசின் ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டு வருவதை காணமுடிகிறது.

அதை  அரசியல் காரணங்களுக்காக  நாட்டிலுள்ள சிலர் ஏற்றுக் கொள்ளா விடினும், இந்த ஆட்சியின் பல மாற்றங்கள் மக்களுக்கு நன்மை செய்ய வல்லது, நம்பிக்கையானது, நாட்டு பிரச்சனைகள் தீர பாடுபடுகிறது என்பதை தெளிவாக மக்கள் உணர்கின்றனர் என்பதன்  சான்றாக  அமைந்துள்ளது ஜோகூர் மாகோத்தா தேர்தல் வெற்றி என்கிறார் முன்னாள்  சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சராகவும் இருந்த டாக்டர்  சேவியர் ஜெயக்குமார். 

''எந்த ஆட்சி வந்தாலும் இந்தியர்களின் பிரச்சனையை எவரும் கண்டுக்கொள்வதில்லை என்ற மனக்குறை பரவலாக இந்தியர்களிடம் இருப்பது இயல்பே. ஆனால், பிரதமருடன் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்தவர்கள் அவ்வாறு கூறினால், அவர்கள் உள்நோக்கம் கொண்டுள்ளனர் உண்மை பேச வில்லை என்பது மட்டும் உறுதி காரணம், இந்திய சமுதாயத்தின் திண்டாட்டங்கள் பற்றி சமுதாயத்தின் ஏக்க குரல் ஒலிப்பது ஒன்றும் புதிதல்ல ஆனால் தேர்தல்  காலங்களில் ஏக்க குரல்  சற்று உரக்க ஒலிப்பதும் ஆச்சரியமில்லை. இந்திய சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் இன்று நேற்று  உருவானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சற்று அதிகமானதே!," என்றார் அவர்.

இருப்பினும்  அரசாங்கம் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளதையும்  நாம் கவனத்தில்  கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த பிரச்சனைகளைக் களைவதில் பிரதமர் நேர்மையாக உண்மையாக நடந்து கொள்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார் டாக்டர்  சேவியர் ஜெயக்குமார். 

அதற்கு ஆதாரமாக, மலேசிய இந்திய நாடாளுமன்ற,சட்டமன்ற மற்றும்  மேலவை உறுப்பினர்களுடன் மூன்றாவது சந்திப்பு நடத்திய  அன்வார் இந்த அரசாங்கம்  இதுவரை இந்தியர்களுக்கு செய்துள்ளதையும், செய்யவுள்ளதையும் பட்டியலிட்டு இருந்தார்.

''அன்வார் பிரதமராக பதவியேற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளில், எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களுடன்  மூன்று சந்திப்புகளை நடத்தியிருப்பது அவர் இந்திய சமுதாயத்திற்கு தரும் முக்கியத்துவத்தை காட்டுவதுடன், அது, அவர் நம் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையின்  வடிவமாக உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமர் இதுபோல் ஆண்டிற்கு 2  சந்திப்பு   கூட்டங்களை  இந்திய நாடாளுமன்ற,  சட்டமன்ற , மேலவை  உறுப்பினர்களுடன்  நடத்தியுள்ளார்," என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

பிரதமராக இருந்தாலும் எதையும் அவர் விருப்பப்படி செய்ய முடியாது, அவரும்  பலருக்கு அதற்கு பதிலளிக்க வேண்டும். அதற்காக அவர் மேற்கொண்டு நடவடிக்கைகள், பொன் எழுத்துக்களால்  பொறிக்கப்பட வேண்டியது. அதன் உள்ளடக்கத்தை அரசியலற்ற  தொலைநோக்குடன்  நாம் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு  காரணம், நம்மை இந்நாட்டின் பங்காளி என்று கூறிக் கொண்டவர்களே. ஆனால் பங்காளிக்கான  அந்தஸ்தை இந்தியர்களுக்கு வழங்கவில்லை என்பதை நினைவுறுத்திய டாக்டர் சேவியர் அன்றைய தலைமைத்துவத்தின் எண்ணத்தையே அன்றைய அரசு  ஊழியர்களும்  செயலில் வெளிகாட்டியதாகக் குறிப்பிட்டார்.

அன்று, அரசாங்க  அதிகாரிகள்  இந்தியர்களின் பிரச்சனைகளில் அக்கறை கொள்ளாததோடு அதை அவர்கள் இந்நாட்டு பிரச்சனையாக கருதவில்லை.

 மலாய்க்காரர்கள்  மற்றும்  அரசாங்க அதிகாரிகளின் எண்ண ஓட்டங்களை நன்கு  அறிந்துள்ள பிரதமர் அன்வார், ஒரு மாறுபட்ட அணுகு முறையை ஆட்சியமைத்த அன்றைய நாளிலிருந்து  அழுத்தமாக  பின்பற்றி வருவதை அவர் கோடி காட்டினார்.

''அனைத்து இன, சமய குழந்தைகளும் என் குழந்தைகள், எல்லோரும் மலேசியாவின் செல்வங்கள் என்று பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறார்.   நீண்ட காலமாக இந்நாடு ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தை கொண்டிருந்த, அரசாங்க அதிகாரிகள் மற்றும், அரசாங்க தலைவர்களின் எண்ணத்தை நீக்க பிரதமர் மேற்கொண்டு வரும் ஒரு உளவியல் செயல்பாடு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆக, பிரதமர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசாங்க தலைவர்களின் மனதில் இந்தியர்கள் உட்பட மற்றவர்களும் இந்நாட்டு பங்காளிகள் என்ற  மறுக்க முடியாத  உண்மையை ஆழ பதியவைக்க பாடுபடுகிறார்.  அதுவே,  இந்த நாட்டு மக்களுக்கு  அவர்  செய்து வரும் மாபெரும் சேவை,'' என்றார் டாக்டர் சேவியர்.

அரசாங்க  தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் மனதிலிருந்து இன சமய பேதங்களை நீக்குவதில் வெற்றி கண்டால், நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக தீர்க்கலாம். அனைத்து இன, சமய மக்களும் பாகுபாடு அற்ற அரசாங்க சேவைகளைப் பெற முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்நாட்டு சிறுபான்மையினருக்கு, நமது பிரச்சனைகளுக்கு பிரதமர்தான் தீர்வு காண வேண்டும் என்ற அவசியம் இருக்காது, அரசாங்க அதிகாரிகளே அதனை தீர்கலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)