பொது

OP NODA சோதனை நடவடிக்கை; போதைப் பொருள் உட்கொண்ட போலீசாரை இடைநீக்கம் செய்ய உத்தரவு

03/10/2024 07:32 PM

கோலாலம்பூர், 03 அக்டோபர் (பெர்னாமா) -- கெடா, சுங்கைப் பட்டாணியில் உள்ள ஒரு மனமகிழ்வு மையத்தில் நேற்று நடைபெற்ற OP NODA சோதனை நடவடிக்கையில் போதைப் பொருளை உட்கொண்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் உத்தரவிட்டுள்ளார்.

அந்நடவடிக்கையின் போது இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் பத்து கீழ்நிலை அதிகாரிகள் கெத்தமின் மற்றும் எம்பெத்தமின் ரக போதைப் பொருளை உண்கொண்டிருந்ததாக ஊடகம் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

புக்கிட் அமான் நேர்மை மற்றும் தர இணக்கத்துறை, JIPS மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், போதைப் பொருள் உட்கொண்டிருந்த 31 பேரில் அந்த போலீஸ் அதிகாரிகளும் உறுப்பினர்களும் அடங்குவர். 

அதைத் தொடர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் உறுப்பினர்களையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யுமாறு தாம் உத்தரவிட்டுள்ளதை டான் ஶ்ரீ ரசாருடின் சுட்டிக்காட்டினார்.

இச்சோதனையில் கைது செய்யப்பட்ட உறுப்பினர்களின் மேற்பார்வையாளர்கள், தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை நிர்வகிக்க தகுதியற்றவர்கள் எனக் கருதப்படுவதால் அவர்களும் இடமாற்றம் செய்யப்படுவர் என்று ரசாருடின் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)