பொது

ஹபிபுல் ரஹ்மானிடம் மன்னிப்பு கோரினார் சைட் சாடிக்

03/10/2024 07:52 PM

கோலாலம்பூர், 03 அக்டோபர் (பெர்னாமா) - சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் ஆலோசகர் ஹபிபுல் ரஹ்மான் காடிர் ஷா தொடுத்திருந்த அவதூறு வழக்கு, அந்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் பொது மன்னிப்பு கேட்டதால் நிறைவுக்கு வந்தது.

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சைட் சாடிக் அந்த விண்ணப்பத்தைச் செய்துள்ளார்.

நீதிபதி நோரக்மார் முஹ்மட் சானி முன்னிலையில் மன்னிப்பு அறிக்கையை வாசித்தபோது, ஹபிபுல் ரஹ்மானிடம் வெளிப்படையாகவும் நிபந்தனையின்றியும் மன்னிப்பு கோருவதாக சைட் சாடிக் கூறினார்.

2017-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி ஶ்ரீ பாசிபிக் தங்கும் விடுதியில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, ஹபிபூல் ரஹ்மானுக்கு எதிராக அவதூறு கூற்றை வெளியிட்டதற்காக சைட் சாடிக் மன்னிப்புக் கோரினார்.

ஹபிபுல் ரஹ்மானுக்கு பல்வேறு பிரச்சனைகளையும் சிரமங்களையும் ஏற்படுத்திய தமது அவதூறான கூற்றுகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு மன்னிப்பு கோருவதாக சைட் சாடிக் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சைட் சாடிக் மன்னிப்பு கேட்டுக்கொண்டது மற்றும் தீர்வு விதிமுறைகளின் அடிப்படையில், ஒப்புதல் தீர்ப்பைப் பதிவு செய்து, நாளை, வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கான நாளாக நீதிமன்றம் நிர்ணயித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)