பொது

ஆசிரியர்களே அதிக போலி மருத்துவ சான்றிதழ் வழங்குவதாக கூறப்படுவது அடிப்படையற்றது

04/10/2024 07:36 PM

புத்ராஜெயா, 04 அக்டோபர் (பெர்னாமா) -- அரசாங்க ஊழியர்களில் ஆசிரியர்களே அதிக போலி மருத்துவ சான்றிதழ் வழங்குவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செய்கின்ற நிலையில் இவ்விவகாரம் எழக்கூடாது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறுகிறார்.

மக்களுக்குச் சிறந்த சேவையை உறுதி செய்வதில் அரசாங்க ஊழியர்களுக்கான நிர்வாகத்தில் எப்போதும் கவனம் செலுத்தப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் FADHLINA SIDEK குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தெளிவான விதிகளை தமது அமைச்சு கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வேளையில், முறைகேடுகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அரசாங்க ஊழியர்களில் ஆசிரியர்களே போலி மருத்துவ சான்றிதழ் வழங்குவதாக ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியை அமைச்சு கடுமையாகக் கருதுவதாக ஃபட்லினா தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]