பொது

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு உள்நாட்டு பேராளர்கள் குழுவிற்கு பிரதமர் தலைமையேற்பார்

08/10/2024 04:08 PM

வியன்டியன், 08 அக்டோபர் (பெர்னாமா)  - இன்று தொடங்கி அக்டோபர் 11-ஆம் தேதிவரை லாவோஸ் வியன்டியனில் நடைபெறும் 44 மற்றும் 45-வது ஆசியான் உச்சநிலை மாநாடுகள் மற்றும் அது தொடர்பான மாநாடுகளில், மலேசியப் பேராளர் குழுவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார்.

அதைத் தவிர்த்து, ஆசியான் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, கனடா, ஆகிய ஏழு விவாத பங்காளி நாடுகளுக்கு இடையிலான Plus One உச்சநிலை மாநாடு, ஆசியான் Plus Three உச்சநிலை மாநாடு, கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாடு, ஆசியான் ஐக்கிய நாடுகளின் உச்சநிலை மாநாடு ஆகியவற்றிலும் பிரதமர் கலந்து கொள்ளவிருக்கின்றார்.

44 மற்றும் 45-வது ஆசியான் உச்சநிலை மாநாடுகள் மற்றும் அது தொடர்பான மாநாடுகள், மலேசியா பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுக்கும் என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆசியான் சமூகத்தின் மேம்பாட்டு முயற்சிகள், 2045 ஆசியான் சமூக பார்வை, வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மை, பொருளாதார ஒருங்கிணைப்பு, பசுமைப் பொருளாதாரம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், ஆற்றல் மாற்றம், உணவுப் பாதுகாப்பு, முழு உறுப்பியத்தை நோக்கி Timor-Leste-வின் செயல்பாடு, வெளி பங்காளிகளுடன் ஆசியானின் உறவு போன்றவைக் குறித்தும் மலேசியா அதில் கலந்துரையாடும்.

அதோடு, தென் சீனக் கடல் மற்றும் மியான்மர், பாலஸ்தீனம், மத்திய கிழக்கு நாடுகளின் மேம்பாடு தொடர்பிலும் மலேசியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.

இந்த உச்சநிலை மாநாடுகளின் நிறைவு விழாவின்போது, ஆசியானின் நடப்பு தலைவரான Laos, அப்பதவியை மலேசியாவிடம் ஒப்படைக்கும்.

2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி மலேசியா அதிகாரப்பூர்வமாக ஆசியான் தலைவர் பதவியை ஏற்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)