பொது

தென்கிழக்காசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான சங்கக் கூட்டம் இன்று லாவோஸில் தொடக்கம்

08/10/2024 04:14 PM

வியன்டியன், 08 அக்டோபர் (பெர்னாமா)  - தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான சங்கக் கூட்டம், ASEAN, AMM இன்று புதன்கிழமை, லாவோஸ் தலைநகரில் தொடங்கியது.

தேசிய மாநாட்டு மையத்தில் நாளை நடைபெறவிருக்கும் 44 மற்றும் 45வது ஆசியான் உச்சநிலை மாநாடுகள் மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களின் தொடக்க விழாவை முன்னிட்டு இந்த ASEAN, AMM கூட்டமும் தொடங்கியது.

இந்த AMM கூட்டத்தில் கலந்துரையாடப்படும் முக்கிய அம்சங்களில், ஆசியான் சமூகத்தை மேம்படுத்தும் முயற்சிகள், எதிர்கால வியூகத் திட்டங்கள் மற்றும் ஆசியானின் வெளியுறவு நிர்வாகம் போன்றவையும் அடங்கும்.

இக்கூட்டத்திற்கு, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஹசானும் அவ்வமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முஹ்மாட் சின்னும் மலேசியப் பேராளர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

மேலும், 28-வது ஆசியான் அரசியல்-பாதுகாப்பு சமூக மன்றம் APSC கூட்டத்திலும் 35-வது ஆசியான் ஒருங்கிணைப்பு மன்ற ACC கூட்டத்திலும் முஹ்மட் ஹசான் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், 44 ,45-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய மாநாடுகளை முன்னிட்டு, Vientiane-னில் இருக்கும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் இன்று சில இருவழி சந்திப்புகளை நடத்துகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)