பொது

இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு

08/10/2024 04:58 PM

ஜோகூர் பாரு, 08 அக்டோபர் (பெர்னாமா)  - இவ்வாண்டின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை ஜோகூர் மாநில சுங்கத் துறை முறியடித்துள்ளது.

கடந்த அக்டோபர் முதலாம் தேதி, இஸ்கண்டார் புத்ரி, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கை மற்றும் தகவல்கள் அடிப்படையில், காலை மணி 11.15-க்கு மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் 60.2 கிலோ கிராம் எடை கொண்ட கொக்கேய்ன் ரக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில சுங்கத் துறை இயக்குநர் அமினூல் இஸ்மீர் முஹ்மட் சோஹைமி தெரிவித்தார்.

அந்த கொள்கலனில் 19 டன் எடை கொண்ட, ஏழு லட்சத்து 35,000 ரிங்கிட் மதிப்புள்ள உறைந்த இறால் இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

"தெற்கு மண்டல புலனாய்வுப் பிரிவின் தகவலின் படி, ஜோகூர் ஜே.கே.டி.எம் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சுங்க அதிகாரிகள் குழு ஜோகூர், தஞ்சோங் பெலேபாஸ் கெலாங் பதாஹ் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையத்தில் 40 அடி கொள்கலனை வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது,"
SUPER: அமிநுல் இஸ்மீர் முஹமாட் சொஹைமி / ஜோகூர் மாநில சுங்கத் துறை இயக்குநர்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமினூல் இஸ்மீர் அவ்வாறு கூறினார்.

இந்தியாவை சேர்ந்த் அந்த கொள்கலன் மலேசியாவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அமெரிக்கா மையாமிக்கு கொண்டுச் செல்லப்படவிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரிக்க அனைத்துல அமலாக்க நிறுவனங்களுடன் தமது தரப்பு ஒத்துழைக்கும் என்று அமினூல் இஸ்மீர் குறிப்பிட்டார்.

1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம், செக்‌ஷன் 39B, உட்பிரிவு 1, உட்பிரிவு ஏ-வின் இவ்விழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)