பொது

சொசிலாவாத்தி கொலை; குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிலைநிறுத்தம்

08/10/2024 05:11 PM

ஜோகூர் பாரு, 08 அக்டோபர் (பெர்னாமா)  - 14 ஆண்டுகளுக்கு முன்னர், அழகுசாதன வர்த்தக கோடீஸ்வரி, சொசிலாவாத்தி லாவியா மற்றும் அவரின் மூன்று உதவியாளர்களை கொலை செய்ததற்காக, முன்னாள் வழக்கறிஞரும் அவரின் தோட்ட தொழிலாளிக்கும் விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை, கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

55 வயதான என். பத்மநாபன் மற்றும் 33 வயதான தி.தில்லையழகன் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி செய்த சீராய்வு மனுவை, தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று தள்ளுபடி செய்தது.

நீதித்துறை விருப்புரிமையைப் பயன்படுத்தி, வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அந்த சீராய்வு மனுவை நிராகரித்து, விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்துவதாக துன் தெங்கு மைமுன் தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு முன்னாள் தோட்ட தொழிலாளியான, 44 வயதுடைய ஆர்.காத்தவராயன், மரணத் தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கான தனது விண்ணப்பத்தை பின்வாங்கியதால், அதனை நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்தது.

அதனைத் தொடர்ந்து, அவரின் மரணத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த 2023-ஆம் ஆண்டு கட்டாய மரணத் தண்டனை ஒழிப்புச் சட்டத்தைத் தொடர்ந்து, மரணத் தண்டனையை சிறைத் தண்டனையாகக் குறைக்கும் முயற்சியில் இந்த சீராய்வு மனு சமர்ப்பிக்கப்பட்டது.

47 வயதான சொசிலாவாத்தி, 38 வயதான வங்கி அதிகாரி நோரிஷாம் முஹ்மட், 32 வயதான வங்கி அதிகாரி, அப்துல் காமில் அப்துல் கரிம் மற்றும் சொசிலாவாத்தியின் வாகன ஓட்டுநர், 44 வயதான கமாரூடின் ஷம்சூடின் ஆகியோரை, பத்மநாபன் , தில்லையழகன் மற்றும் காத்தவராயன் கொலை செய்ததற்காக 2013-ஆம் ஆண்டு மே மாதம், ஷா ஆலம் உயர் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)