பொது

டெலிகிராமில் நிகழும் குற்றச் செயல்களைக் கையாள ஒத்துழைப்பு தேவை

09/10/2024 05:00 PM

கோலாலம்பூர், 09 அக்டோபர் (பெர்னாமா)  - டெலிகிராம் செயலியில் நிகழும் குற்றச் செயல்களைக் கையாள்வதில் அதிகாரிகள், கண்காணிப்பு அமைப்புகள், அரசாங்கத்துடன் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியை பயன்படுத்தி தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய குற்றவியல் சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து,

இணையக் குற்றம், போதைப்பொருள் விற்பனை மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை, இந்த ஒத்துழைப்பு கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''தற்போது எம்.சி.எம்.சி டெலிகிராம் தரப்புடன் சந்திப்பு நடத்தியுள்ளது. பிரான்சில் என்ன நிகழ்கிறது என்பதை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கின்றோம். இந்நேரத்தில் டெலிகிராமும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம். நல்ல ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில், டெலிகிராம் போன்ற இணையத்தில் செய்திகளை அனுப்பும் அமைப்புகள் உட்பட எந்த சமூக ஊடக தளத்திலிருந்தும் எந்தவொரு ஊழியர்களையும் தடுத்து வைக்கவோ அல்லது கைது செய்யவோ அரசாங்கம் விரும்பவில்லை,'' என்றார் அவர்.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி டெலிகிராமுடன் சந்திப்பை மேற்கொண்டதாகவும், குற்றச் சிக்கலைச் சமாளிக்கும் முயற்சியில் இந்த சந்திப்புகள் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்,எம்.சி.எம்.சி-இல் பதிவு செய்ய அனைத்து சமூக ஊடக தளங்களுக்கும் இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

மற்றொரு நிலவரத்தில், செயற்கை நுண்ணறிவு AI-இன் பயன்பாடு, Pos Malaysia நிறுவனத்தில் தொழிலாளர்கள் செய்யும் வேலைகளை மாற்றாது.

மாறாக உழைப்பின் பயன்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில்  கூறினார்.

''ஏ.ஐ. பயன்படுத்தி தொழிலாளர்களை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தரவு ஆய்வாளர்கள் போன்ற புதிய வேலைகளுக்கு பணியாளர்களை மாற்றியமைக்க முடியும். ஏ.ஐ சிலவற்றை மட்டுமே செய்யும் திறன் கொண்டது மற்றும் மனித உழைப்பை மாற்ற முடியாது. தற்போது நிர்வாகத்தின் பல அம்சங்களில் ஏ.ஐ பயன்படுத்தப்படலாம்,'' என்றார் அவர்.

புதன்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற 2024 உலக தபால் தினத்தில் கலந்து கொண்ட பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)