விளையாட்டு

காற்பந்து வாழ்விலிருந்து விடைபெறுகிறார் இனியெஸ்டா

09/10/2024 05:26 PM

பாரிஸ், 09 அக்டோபர் (பெர்னாமா) -- தமது 24 ஆண்டுகால காற்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக பார்சிலோனா மற்றும் ஸ்பெயினின் முன்னாள் மத்திய திடல் ஆட்டக்காரரான என்ருஸ் இன்யெஸ்டா அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு சிற்றரசில் உள்ள, எமிரெட்ஸ் கிளப்பில் தனது காற்பந்து பயணத்திற்கு விடைக் கொடுக்கும் 40 வயது இன்யெஸ்டா, அதற்கு முன்னதாக ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா கிளப்பின் வெற்றிகளில் முக்கிய தூணாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினுக்காக 131 போட்டிகளில் விளையாடி இருக்கும் இன்யெஸ்டா, 2010 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், நெதர்லாந்துக்கு எதிராக, ஒரே கோலை அடித்து அக்கிண்ணத்தை வென்று ஸ்பெயின் வரலாற்றில் இடம் பிடித்தார்.

2008 யூரோ கிண்ணத்தை ஸ்பெயின் கைப்பற்றியதன் மூலம் அதன் 44 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும், 2012-இல் அப்பட்டத்தை தற்காத்தபோது, ஆண்டின் சிறந்த வீரராக இன்யெஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிளாப் ரீதியில், தமது 12 வயதில் பார்சிலோனாவின் லா மாசியா காற்பந்து கழகத்தில் இணைந்த அவர், பின்னர் அந்த கிளப்பிற்காக 674 போட்டிகளில் பங்கேற்று மூன்று பருவங்களுக்கு கேப்டனாகவும் இருந்திருக்கின்றார்.

பார்சாவுடன் ஒன்பது லா லிகா பட்டங்கள், ஆறு கோ டெல் ரே நான்கு ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணங்கள், இரு சூப்பர் கிண்ணங்கள் மற்றும் மூன்று கிளப் உலகக் கிண்ணங்கள் போன்றவை இன்யெஸ்டாவின் காற்பந்து வாழ்க்கைக்கு கிடைத்த மகுடங்களாகும்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)