பொது

அல்தான்துயா கொலை வழக்கு; அசிலாவின் மரண தண்டனை 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக மாற்றம்

10/10/2024 05:57 PM

புத்ராஜெயா, 10 அக்டோபர் (பெர்னாமா) --  2006-ஆம் ஆண்டு மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்ததற்காக முன்னாள் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹட்ரிக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக மாற்றியுள்ளது.

துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான கூட்டரசு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, இன்று அஸிலாவின் மரணத் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றும் மறுபரிசீலனை விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தது.

அஸிலாவிற்கு 12 பிரம்படிகளும், அவர் கைது செய்யப்பட்ட 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதியில் இருந்து சிறைத் தண்டனை காலத்தை தொடங்கவும் கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், இந்தத் தண்டனைக் காலத்தில் 2013-ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்த ஓராண்டு நான்கு மாத காலக்கட்டம் சேர்க்கப்படாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நீதிபதிகள் குழுவில் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிமும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ நோர்டின் ஹசானும் இடம்பெற்றுள்ளனர்.

அஸிலா வழங்கிய ஆதரவு சத்தியப் பிரமாண ஆவணம் வலுவான அம்சமாக விளங்கியதோடு, நீதிமன்றம் அவருக்கு சாதகமான முடிவை வழங்குவதற்கு சரியான காரணமாகவும் அமைந்ததாக தெங்கு மைமுன் தெரிவித்தார்.

முன்னதாக, அஸிலாவின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக அல்தான்துயா தந்தை ஷாரிபு சிதேவ் எழுதிய கடிதமும் சத்தியப் பிரமாண ஆவணத்தில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

48 வயதுடைய அஸிலா 16 ஆண்டுகள் மூன்று மாதங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

இந்தத் தண்டனை மாற்றத்தினால் அஸிலா 2034-ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்படுவார் என்று அவரின் வழக்கறிஞர் ஜெ.குல்டீப் குமார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)