பொது

மக்களவையின் 2ஆவது நாளில் GISBH குழும நிறுவனம் தொடர்பான மூன்று திட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்

11/10/2024 06:49 PM

கோத்தா திங்கி, 11 அக்டோபர் (பெர்னாமா) --   GISB குழும நிறுவனம் தொடர்பான மூன்று திட்ட அறிக்கைகள் மக்களவைக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் தாக்கல் செய்யப்படும்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூலமாகவே அம்மூன்று திட்ட அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படுவதாக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ முஹமாட் நாயிம் மொக்தார், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி ஆகிய மூவரே திட்ட அறிக்கையை தாக்கல் செய்பவர்கள் என்றும் அவர் விவரித்தார்.

''அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் விளக்கத்தை வழங்குவர். மத விவகாரங்களுக்கான அமைச்சர் நம்பிக்கை குறித்த விளக்கத்தை வழங்கலாம். உள்துறை அமைச்சர் சட்டம் மீறல், குற்றவியல் சட்டத்தைத் தவிர்த்து உள்ள சட்டங்கள் அல்லது பிற சட்டங்களைக் குறித்து சமர்பிக்கலாம், சமூக நலத்துறை அமைச்சுர் தற்போது நிகழும் விவகாரங்கள் குறித்தும், அவர்களுக்கு எத்தகைய உதவிகள் வழங்கலாம் என்பது குறித்தும் பேசலாம்'', என்று அவர் கூறினார்.

மேலும்,திட்ட அறிக்கை தாக்கலுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அது தொடர்பில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அவற்றுடன், GISBH தொடர்பான வழக்கில் அரச விசாரணை ஆணையம் நிறுவப்படுவது அவசியமா என்பதையும் அந்த விவாதம் தீர்மானிக்கும் என்றும் அசாலினா  கூறினார்.

இன்று, ஜோகூர், கோத்தா திங்கியில் நடைபெற்ற சட்டத்துறைக்கான கற்றறிவு கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)