பொது

GISBH விவகாரம்; பெண்கள் & சிறார்களை சுயநலத்திற்காக பயன்படுத்தியது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்

11/10/2024 06:55 PM

புத்ராஜெயா, 11 அக்டோபர் (பெர்னாமா) --   GISB குழும நிறுவன விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளும் வகையிலே அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு அரச மலேசிய போலீஸ் படை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்களைச் சுயநலத்திற்காக பயன்படுத்தியது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் போலீஸ் தற்போது 11 வழிமுறைகளைப் பின்பற்றுவதால் அதன் விசாரணையும் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருவதாக  டத்தோ ஶ்ரீ சைஃபுடின் கூறினார்.

அதிலும் குறிப்பாக, சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பெண்களையும் சிறுவர்களையும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.

2017ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

இவ்விவகாரத்தில் மீட்கப்பட்டவர்களில் எழுபது பேர் மீண்டும் தங்கள் குடும்பத்துடன் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்ட வேளையில், மேலும் ஒரு பகுதியினருக்கான விசாரணை முழுமை பெறாததால், அவர்கள் இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் தெரிவித்தார்.

இதனிடையே GISBH தொடர்பான விசாரணையைப் போலீஸ் போதுமான வெளிப்படைத்தன்மையுடனும் எச்சரிக்கையுடனும் நடத்துவதையும் அவர் கோடிகாட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக தலைமையாசிரியர் உடனான சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)