பொது

தென் சீனக் கடல் சர்ச்சை; ஆசியான் வாயிலான தூதர அணுகுமுறை தீர்வுக்கு சிறந்த வழி

11/10/2024 06:59 PM

வியன்டியான், 11 அக்டோபர் (பெர்னாமா) --   தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைகளைத் தீர்வுக் காண்பதற்கு ஆசியான் வாயிலான தூதர அணுகுமுறையும் ஒத்துழைப்பும் சிறந்த வழியாகும் என்று மலேசியா வலியுறுத்துகிறது.

தென் சீனக் கடலின் பெரும்பகுதி தங்களுக்கு சொந்தம் என்று சீனா உரிமைக் கோரினாலும், தமது கடல்சார் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக சட்டம் வழி மலேசியா செயல்படுவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹாசான் தெரிவித்தார்.

''நாங்கள் அனைத்துலக சட்டத்தையும் பின்பற்றுகிறோம். எனவே, பாருங்கள். ஆனால், இராஜதந்திரம் மூலம் எதையும் செய்ய முடியும். அதனால், நாங்கள் கதவை மூடவில்லை. எங்களுடைய தொடர்பு நிச்சயம் உள்ளது'', என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு நாடும் தென் சீனக் கடல் பிரச்சனைக்குத் தீர்வுக் காண தனித்தனியாக செயல்படாமல் ஆசியானின் அணுகுமுறை மூலம் ஒன்றிணைந்து கையாள வேண்டும் என்று மலேசியா எண்ணம் கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ முஹமட் ஹாசான் கூறினார்.

44-வது மற்றும் 45-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்றிரவு, மலேசியா செய்தியாளர்களைச் சந்தித்த முஹமட் ஹாசான் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)