உலகம்

மேற்கு & மத்திய ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம்; மக்கள் அவதி

12/10/2024 07:09 PM

சாட், 12 அக்டோபர் (பெர்னாமா) -- மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா வட்டாரம் முழுவதும் ஏற்பட்ட மோசமான வெள்ளம், சுமார் 20 லட்சம் பேருக்கு பேரழிவுகரமான விளைவுகளையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதில், சாட் இந்த வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.

சாட் குடியரசில் உள்ள 23 மாகாணங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால், 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த வெள்ளத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும், 4 லட்சத்து 32 ஆயிரம் ஹெக்டர் நிலம் சேதமடைந்ததோடு 72,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டன.

34 லட்சம் பேர் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அங்கு உணவுப் பாதுகாப்பின்மை நிலை இன்னும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளம், அந்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளைச் சேதப்படுத்தியுள்ளதோடு, சாலைகளும் பாலங்களும் சேதமடைந்ததில், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் சிரமமும் ஏற்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)