பொது

பகாங் & பேராக்கில் மோசமடைந்து வரும் வெள்ளம்

14/10/2024 08:08 PM

கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா) --   பகாங் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் மோசமடைந்து வரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாறாக, கெடா, ஜோகூர் மற்றும் மலாக்கா உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித மாற்றமும் கண்டறியப்படவில்லை.

இன்று மதியம் 3.30 மணி வரையில், பகாங், தெமெர்லோ மாவட்டத்தில் 244 குடும்பங்களைச் சேர்ந்த 856 பேர் ஐந்து தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

காலை நிலவரப்படி, 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், மதியம் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ஶ்ரீ செமாந்தான் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் 462 பேர், டெசா பக்தி தேசியப் பள்ளியில் 308 பேர், லஞ்சாங் தேசியப்பள்ளியில் 36 பேர், பாலாய்ராயா மெம்பாத்தேவில் 30 மற்றும் கம்போங் பொங்சூ பள்ளிவாசலில் 20 பேர் இதுவரை தஞ்சமடைந்திருப்பதாக, சமூக நலத்துறையின் InfoBencana செயலியின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. 

இதனிடையே, மெந்திகா ஆறு, ஜம்பாதான் சினீ  மற்றும் பெக்கான் ஆகிய ஆறுகளில் அதன் நீர் மட்டம் அபாய கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், தெமெர்லோ மெந்தகாப் இரயில் பாதையில் இருக்கும் செமாந்தான் ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை மீறி உயர்ந்துள்ளதாக, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை பதிவிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)