பொது

நோயாளிகளுக்கான கட்டணத்தை 40% வரை உயர்த்த ஐ.ஜே.என் விண்ணப்பம்

14/10/2024 06:29 PM

கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா) -- கட்டண விகிதத்தை 40 விழுக்காடு உயர்த்துவதற்கான விண்ணப்பம் குறித்து சுகாதார அமைச்சு தேசிய இருதயக் கழகம், ஐ.ஜே.என்-உடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும்.

இவ்விவகாரம் குறித்து தமது தரப்பு நிதி அமைச்சுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ளும் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.

ஐ.ஜே.என் சுகாதார அமைச்சின் கீழ் செயல்படாததால், அதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விதிக்கப்படும் கட்டண விவகாரத்தில் சுகாதார அமைச்சு நேரடியாக ஈடுபட முடியாது என்று அவர் கூறினார்.
 
"ஐ.ஜே.என் நிதி அமைச்சின் கீழ் உள்ளது. சுகாதார அமைச்சு ஐ.ஜே.என்-இன் வாடிக்கையாளர். தற்போது (கட்டண உயர்வு) ஐ.ஜே.என்-இன் முடிவு ஆகும்.

"இது அக்கழகத்திற்கு நோயாளிகளை அனுப்பு சுகாதார அமைச்சு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் விளக்கம் அளித்தார்.

2003-ஆம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட அசல் கட்டணத்தையே இன்னும் அரசாங்கத்திடம் இருந்து வசூலிப்பதால், சுகாதார அமைச்சால் அனுப்பப்படும் நோயாளிகளுக்கான கட்டண விகிதத்தை 10 முதல் 40 விழுக்காடு வரை உயர்த்த ஐ.ஜே.என் விண்ணப்பம் செய்துள்ளதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)