பொது

இளையோர் சாதனைகளை ஊக்குவிக்கிறது பினாங்கு மாநில MIYC

14/10/2024 08:59 PM

ஜார்ஜ்டவுனில், 14 அக்டோபர் (பெர்னாமா) --  இந்திய இளையோர்களின் முயற்சிகளையும் சாதனைகளையும் ஊக்குவித்து தட்டிக்கொடுப்பதன் வழி, வருங்காலத்தில் அவர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்குவதோடு சமூக முன்னேற்றத்திற்கான பங்களிப்பையும் அதிகரிக்க முடியும்.

அதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் மலேசிய இந்திய இளைஞர் மன்றம் MIYC, பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்திய இளைஞர்களின் திறன்களை அடையாளம் கண்டு இரண்டாவது ஆண்டாக அவர்களின் சாதனைகளை விருது வழங்கி அங்கீகரித்தது.

தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் எனும்
பொதுநல இலக்கில் பணிக்கும் MIYC-யின் மாநில அளவிலான இந்த விருதளிப்பு விழா, நேற்று பினாங்கு ஜார்ஜ்டவுனில் நடைபெற்றது.

சிறந்த தலைமைத்துவம், தொழில்முனைவோர், சிறந்த தன்னார்வலர், கலை, இசைத்துறை, மகளிர் மேம்பாடு, விளையாட்டு, விவசாயம் என்று மொத்தம் எட்டுப் பிரிவுகளில் எண்மருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதுபோன்ற முயற்சிகள் இந்திய இளைஞர்களிடையே, தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சமுதாயத்தில் இது தங்களுக்கு கிடைக்கும் மரியாதைக்குரிய அங்கீகாரம் என்று விருது பெற்றுக்கொண்டவர்கள் சிலர் கூறினர்.

இந்த விருது விழா திறன்மிக்க இளைஞர்களுக்கு மட்டுமின்றி, தன்னலம் பாராது சமூக சேவையில் மிளிரும் இளம் தலைமுறையினரை அடையாளம் கண்டு அவர்களையும் அங்கீகரிப்பதாக பினாங்கு மாநில MIYC தலைவர் ஜனார்த்தனன் வேலாயுதம் தெரிவித்தார்.

அரசாங்க வாய்ப்புகளை இந்திய இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் MIYC-யின் மாநில அளவிலான விருதளிப்பு விழாவிற்கு, தேசியத் தலைவர் டேனிஸ் பாசில், பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூய் சி சென் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)