பொது

இந்தியர்களின் வணிக தேவை உணர்வை அறிந்தவர் பிரதமர்

16/10/2024 07:14 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டில் முறையாக பதிவு செய்யப்பட்ட 12 லட்சம் வர்த்தகங்களில் 98 விழுக்காடு  சிறு வணிகர்களை உட்படுத்தியது.

அந்த எண்ணிக்கையில் 70 விழுக்காடு குறு வியாபாரிகளை உட்படுத்தியதாகும்.

கல்விக்கு அடுத்த நிலையில் வர்த்தகமே இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்று அறிந்த பிரதமர், கடந்தாண்டைப் போல இந்தியர்களின் வணிக தேவை அறிந்து இம்முறையும் பல்வேறு அமைச்சு மற்றும் துறைகளில் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை....

வரும் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்பார் என்று கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை சம்மேளனம், KLSICCI-இன் தலைவர் நிவாஸ் ராகவன் நம்பிக்கைத் தெரிவித்தார். 

"நாடு தழுவிய அளவிலுள்ள 98 விழுக்காட்டு சிறுவணிகர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு 38 விழுக்காட்டு ஜிடிபி வழங்கி தங்களின் பங்களிப்பை செலுத்துகின்றனர். அதன் பொருட்டு சிறு வணிகர்களின் வளர்ச்சி நீரோட்டத்திற்கு துணைபுரியும் வகையில் அரசாங்கம் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமால் அறிமுகப்படுத்தப்பட்ட மடானி பொருளாதார கட்டமைப்பு வழியாக கடந்த ஈராண்டுகளாக இந்தியர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து சிறு வணிகர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக நிவாஸ் கூறினார்.

அதேவேளையில், இந்திய சிறு வணிகர்களுக்கு GRANT என்ற அழைக்கப்படும் மானியத் தொகை கிடைத்தாலும் அது நாட்டில் இருக்கக்கூடிய வர்த்தகர்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

"உதாரணத்திற்கு ஏறக்குறைய 98 விழுக்காட்டு அளவு அதாவது சுமார் 12 லட்சம் சிறு வணிகர்கள் நாட்டில் உள்ளனர். இருப்பினும் எம்டெக் மூலமான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக அதில் இரண்டு அல்லது மூன்று விழுக்காடு மட்டுமே உள்ளது. எனவே இத்தகைய மானியத்தின் எண்ணிக்கையை அதிகரித்தால் அது சிறுவணிகர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும்," என்று நிவாஸ் கருத்துரைத்தார்.

குறு வணிகர்களின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு, பேங்க் நெகாராவின் ஏற்பாட்டில், 15 நிதிக் கழக்கங்களின் துணையோடு செயல்பட்டு வரும் குறு கடனுதவித் திட்டத்தின் வழி அரசாங்கம் 50,000 ரிங்கிட் வரையில் கடனுதவி வழங்கி வருவதை இந்தியர்களில் பலர் இன்னும் அறியாமல் இருப்பதையும் நிவாஸ் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில், இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்துறையைச் சேர்ந்தவர்களும் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் முறைக்கு ஏற்ப தங்களின் வியாபாரத்தை உருமாற்றிக் கொண்டால் அத்துறைகளுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு நிறைவாகக் கிட்டும் என்று பெர்னாமா செய்திகளிடம் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)