பொது

E-REBATE: 7 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

28/10/2024 07:49 PM

கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- ஆற்றலின் பயன்பாடு மற்றும் செயல்திறன் குறித்த சமூக விழிப்புணர்வை உருவாக்குவதுடன், தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கத்திற்காக,

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏழு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து, அரசாங்கம் E-REBATE எனப்படும் மின்னியல் கழிவு திட்டத்தைத் தொடரவிருக்கிறது.

ஐந்து மற்றும் நான்கு நட்சத்திர விகிதத்தில் அங்கீகரிக்கப்பட்ட மின்னியல் உபகரணங்களை வாங்குவோருக்கு அக்கழிவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப்  தெரிவித்தார்.

" ஐந்து மற்றும் நான்கு நட்சத்திர விகிதத்தில் அங்கீகரிக்கப்பட்ட மின்னியல் உபகரணங்களை வாங்குபவர்களுக்கு இந்தக் கழிவு வழங்கப்படும். நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம், சேடாவிடம் அவர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்தாண்டுக்கான ஒதுக்கீடும் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தைத் தொடர ஏழு கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது, " என்றார் அவர்.

இது தொடர்பில், பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஷஹர் அப்துல்லா இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு டத்தோஸ்ரீ ஃபாடில்லா அவ்வாறு பதிலளித்தார்.

பயனீட்டாளர்களும் தொழில்துறையினரும் ஆற்றல் திறன் கொண்ட மின் உபகரணங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மின்னியல் கழிவுக்கு 2025-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஏழு கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)